‘என்னால் வாஷியின் கனவு தடைபடக் கூடாது’ தனி வீட்டில் வசிக்கும் சுந்தர் - ரசிகர்கள் பூரிப்பு!
கரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதியில் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் மீது திரும்பியுள்ளது.
அதன்படி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஜூன் 18ஆம் தேதி ஹாம்ப்ஷையர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் அடங்கிய இங்கிலாந்து தொடரிலும் விளையாட உள்ளது.
இத்தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டு, வீரர்கள் அனைவரும் ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து செல்லவுள்ளனர்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் வாஷிங்டன் சுந்தரின் தந்தை எம்.சுந்தர், வருமான வரி துறையில் பணியாற்றி வருகிறார். இதனால் அவர் அடிக்கடி அலுவலகம் சென்று வருவது வழக்கம்.
இப்படி இருக்கையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பாக வீரர்கள் யாருக்கேனும் கரோனா உறுதி செய்யப்பட்டால், அவர்கள் தொடரிலிருந்து விலக்கப்படுவர் என பிசிசிஐ சமீபத்தில் எச்சரித்துள்ளது. இதனால் வாஷிங்டன் சுந்தர் நிச்சயம் இத்தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அவரது தந்தை எம்.சுந்தர் தனி வீட்டில் தங்கி அலுவலகம் சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேசிய எம்.சுந்தர், “வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் தொடரில் இருந்து வந்ததில் இருந்து நான் வேறு வீட்டில் தான் தங்கியுள்ளேன். எனது மனைவியும், சுந்தரும், வீட்டை விட்டு வெளியே வராமல் தனியாக உள்ளனர். வீடியோ காலின் மூலமாக தான் அவர்களை பார்த்து வருகிறேன். இங்கிலாந்தில் விளையாட வேண்டும் என்பது வாஷிங்டன் சுந்தரின் கனவு. எனவே என்னால் அவரின் கனவு தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக இதை செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.