கெய்க்வாட்டிற்கு ஆதரவு தரும் வாசிம் ஜாஃபர்!

Updated: Sun, Feb 20 2022 15:36 IST
Wasim Jaffer calls for patience with struggling Ishan Kishan (Image Source: Google)

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 2 போட்டிகளின் முடிவில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 2 – 0* என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இதை தொடர்ந்து இந்த இரு அணிகளும் மோதும் 3ஆஅவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. குறைந்தபட்சம் இந்த போட்டியிலாவது வெற்றி பெற்று ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் போராடுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது.

முன்னதாக இந்த டி20 தொடரில் இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிசான் ரன்கள் குவிக்க தடுமாறி வருகிறார். குறிப்பாக இந்த தொடரின் முதல் போட்டியில் 42 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பின் நடந்த 2வது போட்டியிலும் 10 பந்துகளை சந்தித்து வெறும் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 
இத்தனைக்கும் சமீபத்தில் நடந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக அவர் சாதனை படைத்தார். அவரின் இந்த மோசமான பார்ம் 15.25 கோடி என்ற மிகப்பெரிய தொகையை செலவு செய்து வாங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தினரை கவலையடைய வைத்துள்ளது.

இப்படி இஷான் கிசான் சொதப்பி வரும் இதே நேரத்தில் இதே இந்திய அணியில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் மற்றும் விஜய் ஹசாரே கோப்பையில் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து மலைபோல ரன்களைக் குவித்த மற்றொரு இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். சமீப காலங்களாக இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டாலும் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்திருக்கிறார்.

இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்க்கு விரைவில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுபற்றி பேசிய அவர்“வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இஷான் கிஷனுக்கு மேலும் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும். இருப்பினும் அதன் பின் நடைபெறவுள்ள இலங்கை தொடரில் ருதுராஜ்க்கு வாய்ப்பளிப்பது பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டும். அதே சமயம் அவருக்கு வழங்கப்படும் வாய்ப்பு என்பது வெறும் ஒரு போட்டியுடன் நின்றுவிடாமல் நீண்ட வாய்ப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் முழு தொடரிலும் வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவரும் சிறப்பாக விளையாடுவார்” என தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு 635 ரன்கள் விளாசி ஆரஞ்சு தொப்பியை வென்ற ருத்ராஜ் கைக்வாட் அதன்பின் இலங்கையில் நடந்த டி20 தொடரில் இந்தியாவுக்காக முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்றார். இருப்பினும் அவருக்கு அந்த தொடரில் முழுமையாக வாய்ப்பளிக்காமல் வெறும் ஒரு சில போட்டிகளில் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை