ஐபிஎல் 2022: அடுத்தடுத்து விக்கெட்டுகள்; அசத்திய வாஷிங்டன்!
ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டியில் இன்று லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து நடைபெற்ற முதல் இன்னிங்ஸில் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார் வாஷிங்டன் சுந்தர்.
ஹைதராபாத் அணியின் முதல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்றது. இதில் 211 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 78 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இதன் பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் வெறும் 14 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸருடன் 40 ரன்களை விளாசினார். எனினும் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு இருந்தது.
பேட்டிங்கில் என்னதான் 285 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடினாலும் பந்துவீச்சில் சொதப்பினார். வெறும் 3 ஓவர்களை வீசிய அவர் 47 ரன்களை தாராளமாக வாரி வழங்கினார். ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் எடுத்துக் கொடுத்தார். இதனால் அவர் ஒரு ஆல்ரவுண்டராக சரியாக செயல்படவில்லை என்ற அதிருப்தி இருந்தது.
இந்நிலையில் அதற்கெல்லாம் இன்று பதிலடி கொடுத்துள்ளார். முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கும் போது வாஷிங்டன் சுந்தருக்கு பவர் பிளேவின் 2ஆவது ஓவரை நம்பிக் கொடுத்தார் வில்லிஅம்சன். அவர் வீசிய 4வது பந்திலேயே லக்னோ அணியின் ஓப்பனர் டி காக் 1 ரன்னுக்கு அவுட்டாகி வெளியேறினார்.
இதனால் மீண்டும் 4ஆவது ஓவரும் சுந்தருக்கு வழங்கப்பட்டது. அந்த ஓவரில் முதல் பந்திலேயே விக்கெட்டை அள்ளினார். ஸ்வீப் ஷாட் ஆட முயன்ற அதிரடி வீரர் எவின் லீவிஸை எல்.பி.டபள்யூ அவுட்டாக்கி வெளியேற்றினார். இதன் மூலம் லக்னோ அணியின் 2 அதிரடி வீரர்களை வெறும் 1 ரன்னுக்கு அவுட்டாக்கி சுந்தர் அசத்தினார்.