டெவான் கான்வேவுக்கு அதிர்ச்சி கொடுத்த அப்ரார் அஹ்மத் - வைரலாகும் காணொளி!

Updated: Wed, Feb 19 2025 16:12 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில்  குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா, ஜேக்கப் டஃபி ஆகியோர் விளையாடாத நிலையில், வில் யங், மெட் ஹென்றி அகியோர் லெவனில் இடம்பிடித்துள்ளனர். மறுபக்கம் பாகிஸ்தான் அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஹாரிஸ் ராவுஃப் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் வில் யங் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர்கள் கேன் வில்லியம்சன் ஒரு ரன்னிலும், டேரில் மிட்செல் 10 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வரும் வில் யங் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். 

இந்நிலையில் இப்போட்டியில் டெவான் கான்வேவை பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மத் க்ளீன் போல்டாக்கி அசத்தினார். அதன்படி இன்னிங்ஸின் 8ஆவது ஓவரை அப்ரார் அஹ்மத் வீசிய நிலையில் அந்த ஓவரின் மூன்றாவது பந்தை அவர் கூக்ளியாக வீசினார். இதை சற்றும் எதிர்பார்க்காத டெவான் கான்வே பந்தை தடுக்க முயற்சித்து தவறவிட, க்ளீன் போல்டாகினார். இதனால் இப்போட்டியில் கான்வே 10 ரன்கள் மட்டுமே எடுத்த ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். 

நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டெவன் கான்வே, வில் யங், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர்(கே), நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, வில்லியம் ஓரூர்க்

பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: ஃபகார் ஜமான், பாபர் அசாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கே), சல்மான் ஆகா, தையாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூஃப், அப்ரார் அகமது.

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை