மைதானத்தில் சொல்பேச்சை கேட்மால் இருந்த ஜெய்ஸ்வால்; களத்தை விட்டு வெளியே அனுப்பிய ரஹானே!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இத்தொடரின் இறுதிப் போட்டியான மேற்கு மண்டலம் மற்றும் தென்மண்டலம் அணிகளுக்கு இடையேயான போட்டி கோவையில் நடந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கு மண்டல அணி 270 ரன்கள் மட்டுமே அடிக்க, தெற்கு மண்டல அணி 327 ரன்களை குவித்தது.
57 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய மேற்கு மண்டல அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டை சதமடித்தார். ஜெய்ஸ்வால் 265 ரன்களை குவித்தார். சர்ஃபராஸ் கான் சதமடித்தார் 127. இதனால் 2ஆவது இன்னிங்ஸில் வெறும் 4 விக்கெட் இழப்பிற்கு 585 ரன்களை குவித்து அந்த அணி டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென்மண்டல அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, மேற்கு மண்டல அணி 294 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் தென்மண்டல வீரர் ரவி தேஜா பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது அவரை யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஸ்லெட்ஜிங் செய்ய, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து போட்டி நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்ய, மேற்குமண்டல கேப்டன் ரஹானே, ஸ்லெட்ஜிங் செய்யக்கூடாது என்று சில நிமிடங்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை கண்டித்துவிட்டு சென்றார்.
ஆனால் கேப்டன் பேச்சை கேட்காமல் மீண்டும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரவி தேஜாவை கையை காட்டி ஏதோ பேச, செம கோபமடைந்த ரஹானே, நேரடியாக ஜெஸ்வாலிடம் வந்து அவரை திட்டி களத்தை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். அந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
பொதுவாகவே மிகவும் ஒழுக்கமான வீரர் அஜிங்கியா ரஹானே. அவரது கேப்டன்சியில் ஆடும்போது அணியின் அணுகுமுறைகளும் அப்படித்தான் இருக்கும். தனது அணியை ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த அணியாக வைத்திருப்பது ரஹானேவின் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி ஆடாத டெஸ்ட் போட்டிகளில் ரஹானேவின் கேப்டன்சியில் இந்திய அணியையே அப்படித்தான் வைத்திருப்பார்.
அதன்பின் கிட்டத்திட்ட 7 ஓவர்கள் கழித்தி யஷஸ்வி ஜெய்ஸ்வாலிற்கு மீண்டும் ஃபீல்டிங் செய்ய ரஹானே வாய்ப்பளித்து மைதானத்திற்குள் வரவழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.