பிபிஎல் 2022: பவுன்சரில் சுருண்டு விழுந்த ஃபிளெட்சர்!
பங்களதேஷ் பிரீமியர் லீக் தொடர் கடந்த 21ஆம் தேதியிலிருந்து நடந்துவருகிறது. சட்டாக்ராம் சேலஞ்சர்ஸ் மற்றும் குல்னா டைகர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவரில் 190 ரன்கள் அடிக்க, 191 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டைகர்ஸ் அணி 165 ரன்கள் அடித்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் டைகர்ஸ் அணியில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ஃபிளெட்சர் 16 ரன்களுடன் களத்தில் இருந்தபோது, ரிஜார் ரஹ்மான் ராஜா என்ற பவுலர் வீசிய பவுன்ஸர் பந்தில் கழுத்தில் அடிவாங்கினார். ஹெல்மெட்டின் கீழ் பகுதியில் படாமல், அதற்கும் கீழாக ஃபிளெட்சரின் கழுத்தில் அடித்தது.
வலியால் சுருண்டு விழுந்த ஃபிளெட்சர் உடனடியாக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து அவருக்கு கன்கஷன் மாற்றாக சிக்கந்தர் ராஸா களமிறங்கினார். ஃபிளெட்சருக்கு பயப்படும்படியாக பெரும் பாதிப்பு எதுவுமில்லை என்று அந்த அணியின் ஃபிசியோ தெரிவித்தார்.
34 வயதான ஆண்ட்ரே ஃபிளெட்சர் அதிரடியாக அடித்து ஆடக்கூடிய வெஸ்ட் இண்டீஸின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 25 ஒருநாள் மற்றும் 54 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளா. அதுபோக உலகளவில் நடத்தப்படும் பல்வேறு டி20 லீக் தொடர்களிலும் ஆடிவருகிறார்.