சிக்ஸர்களை பறக்கவிட்ட ஆஷ்லே கார்ட்னர் - வைரலாகும் காணொளி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து குஜராத் ஜெயண்ட்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது பெத் மூனி மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோரின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்த நிலையில் 201 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆஷ்லே கார்ட்னர் 3 பவுண்டரி, 8 சிஸர்கள் என 79 ரன்களையும், பெத் மூனி 56 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனைகள் சொதப்பிய நிலையில், எல்லிஸ் பெர்ரி 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 57 ரன்களையும், இறுதிவரை அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 64 ரன்களையும், கனிகா அஹுஜா 30 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் வீழ்த்தியது.
இப்போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியைத் தழுவிய நிலையில் அந்த அணி கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் அதிரடியாக விளையாடியது அந்த அணி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக அவர், ஆர்சிபி பந்துவீச்சாளர் பிரேமா ராவத் வீசிய இன்னிங்ஸின் 14ஆவது ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்ஸர்களை விளாசியதுடன், தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
மேற்கொண்டு இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆஷ்லே கார்ட்னர் 37 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 8 சிஸர்களை விளாசி 79 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கையும் கொடுத்தார். மேலும் இப்போட்டியில் அவர் 8 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீராங்கனை எனும் சாதனையையும் சமன்செய்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக 2023ஆம் ஆண்டு நியூசிலாந்தின் சோஃபி டிவைன் ஒரு இன்னிங்ஸில் 8 சிக்ஸர்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது ஆஷ்லே கார்ட்னர் சமன்செய்து அசத்தியுள்ளார். இதுதவிர பந்துவீச்சிலும் அபாரமாக செயல்பட்ட கார்ட்னர் தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் ஆஷ்லே கார்ட்னர் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.