NZ vs BAN: ஒரே பந்தில் ஏழு ரன்கள் - வைரல் காணொளி!
வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் டெஸ்ட்டில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் முதல் முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
இந்நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
முதல் டெஸ்ட்டில் அடைந்த வரலாற்று படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்கினர் நியூசிலாந்து வீரர்கள். நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் வில் யங் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 148 ரன்களை சேர்த்து கொடுத்தனர். அரைசதம் அடித்த வில் யங் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அபாரமாக ஆடிய நியூசிலாந்து தொடக்க வீரரும் கேப்டனுமான டாம் லேதம் சதமடித்தார். 2வது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த டெவான் கான்வேவும் அருமையாக விளையாடினார். இரட்டை சதத்தை நெருங்கிய டாம் லேதம் 186 ரன்களுடனும், சதத்தை நெருங்கிய கான்வே 99 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் அடித்துள்ளது.
இந்த இன்னிங்ஸின் 27ஆவது ஓவரை எபடாட் ஹுசைன் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட வில் யங், முதல் ஸ்லிப்பிடம் கேட்ச் கொடுத்தார். முதல் ஸ்லிப்பிற்கு சென்ற அந்த கேட்ச்சை 2ஆவது ஸ்லிப் ஃபீல்டர் பிடிக்க முயன்று கோட்டைவிட்டார்.
இதையடுத்து பவுண்டரியை நோக்கி ஓடிய பந்தை ஃபீல்டர் பிடித்து விக்கெட் கீப்பரிடம் த்ரோ அடித்தார். அதற்குள்ளாக லேதமும் யங்கும் 3 ரன்கள் ஓடிவிட்டனர். ஃபீல்டர் அடித்த த்ரோவை பிடித்த விக்கெட் கீப்பர், பவுலர் முனைக்கு த்ரோ அடிக்க, அதை பவுலர் பிடிக்காமல் விட, பந்து பவுண்டரிக்கு சென்றது.
பவுண்டரியுடன், பேட்ஸ்மேன்கள் ஓடிய 3 ரன்களையும் சேர்த்து 7 ரன்கள் வழங்கப்பட்டது. இதன்மூலம் ஒரே பந்தில் யங் 7 ரன்கள் அடித்தார். இந்த அரிதினும் அரிதான சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.