நோ லுக் ஷாட்டில் சிக்ஸர் விளாசிய டெவால்ட் பிரீவிஸ் - வைரலாகும் காணொளி!
எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் நேற்று தொடங்கியது. இதில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேப்டவுன் அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய டெவால்ட் பிரீவிஸ் அதிரடியாக விளையாடியதுடன் 23 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 56 ரன்களில் பிரீவிஸ் தனது விக்கெட்டை இழந்த நிலையில், இறுதியில் அதிரடியாக விளையாடிய ஜார்ஜ் லிண்டே 23 ரன்களையும், டெலானோ போட்ஜிட்டர் 25 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது.
இதனையடுத்து இலக்கை நோகி விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கும் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க 16 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 13 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் 19 ரன்களுக்கும், மார்கோ ஜான்சன் 14 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
இதனால் அந்த அணி 15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டவுன் தரப்பில் டெலானோ போட்ஜிட்டர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த டெலானோ போட்ஜிட்டர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இப்போட்டியில் கேப்டவுன் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சூழ்நிலையில் பேபி ஏபிடி என அழைக்கப்படும் டெவால்ட் பிரீவிஸ் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியதுடன் 29 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 56 ரன்களைக் குவித்தார். அதிலும் குறிப்பாக அவரது டிரேட் மார்க் ஷாட்டான நோ லுக்கின் ஷாட்டில் சில சிக்ஸர்களையும் பறக்கவிட்ட அவர் ரசிகர்களுக்கு விருந்து படைத்ததுடன், தனது ஃபார்மையும் நிரூபித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்படி சன்ரைசர்ஸ் வீரர் பேயர்ஸ் பந்தை ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியே வீச, அதனை சரியாக கணித்த டெவால்ட் பிரீவிஸ் நோ லுக் ஷாட்டின் மூலம் லாங் ஆன் திசையில் இமாலய சிக்ஸரை பறக்கவிட்டார். அந்த பந்தானது மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்த சமயத்திலும் கூட டெவால்ட் பிரீவிஸ் அந்த பந்தை பார்க்கவில்லை. இந்நிலையில் டெவால்ட் பிரீவிஸின் இந்த நோ லுக் ஷாட் சிக்ஸர் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.