பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்சை பிடித்த பிரீவிஸ் - வைரலாகும் காணொளி!
எஸ்ஏ20 லீக் தொடரின் 3அவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேப்டவுன் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஜார்ஜ் லிண்டே மற்றும் டெலானோ போட்ஜீட்டர் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜார்ஜ் லிண்டே 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களையும், போட்ஜீட்டர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 44 ரன்களையும் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்தது.
இதனையடுத்து இலக்கை நோக்கி விலையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்கா வீரர் டெவான் கான்வே 9 ரன்களிலும், அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவும் 14 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் ஜோபர்க் அணி 11.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்களைச் சேர்த்திருந்தது. அதன்பின் மழை பெய்த காரணத்தால் இப்போட்டி தடைப்பட்டது.
தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் போட்டியின் முடிவானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி முடிவு கடைபிடிக்கப்பட்டது. அந்தவகையில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபாஃப் டூ பிளெசிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் கேப்டவுன் அணியின் நட்சத்திர வீரர் டெவால்ட் பிரீவிஸ் பவுண்டரில் எல்லையில் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதன்படி இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த் ஜோபர்க் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மும்பை தரப்பில் காகிசோ ரபாடா வீசிய இன்னிங்ஸின் 8ஆவது ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் தூக்கி அடித்தார். ஆனால் பந்து அவரது பேட்டில் பட்டு டீப் எக்ஸ்ட்ரா கவர் திசையை நோக்கி சென்றது.
Also Read: Funding To Save Test Cricket
அச்சமயத்தில் அங்கு ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த டெவால்ட் பிரீவிஸ் பவுண்டரி எல்லையில் தாவிப்பிடித்த கையோடு எல்லையைத் தாண்டினார். இருப்பினும் எல்லையை தாண்டுவதற்கு முன்னரே அவர் பந்தை தூக்கி எறிந்ததுடன் மீண்டும் எல்லைக் கோட்டிற்குள் நுழைந்து பந்தை கேட்ச் பிடித்தார். இதனால் 30 ரன்களை எடுத்த கையோடு டூ பிளெசிஸ் தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் டெவால்ட் பிரீவிஸ் பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளி இணயத்தில் வைரலாகி வருகிறது.