மைதானத்தில் அத்துமீறிய ரசிகர்கள்; காவல்துறையினர் வழக்குப்பதிவு!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி நிர்ணயித்துள்ள 447 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.
இப்போட்டியில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் நேற்றைய தினம் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. அதாவது இலங்கை அணி இன்னிங்ஸின் போது குசல் மெண்டீஸுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட, அச்சமயத்தில் 4 ரசிகர்கள் களத்திற்கு உள்ளே எகிறி குதித்து நுழைந்தனர்.
மைதானத்திற்குள் அங்கும் இங்குமாக ஓடிய அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் சிரமப்பட்டு பிடித்து இழுத்துச்சென்றனர். அப்போது அங்கு சென்ற விராட் கோலி, அவர்களை எதுவும் செய்யாதீர்கள், விடுங்கள் எனக்கூறி,பின்னர் ரசிகர்களிடம் என்ன வேண்டும் எனக்கேட்டுள்ளார். மேலும் அவர்களுடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தும் பத்திரமாக அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் விராட் கோலி ஒருபுறம் சிரித்துக்கொண்டே அனுப்பி வைக்க, மற்றொரு புறம் அந்த 4 பேரும் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். மேலும் அவர்களின் விவரங்களை குறித்துவைத்திருந்த பெங்களூரு காவல் துறையினர், இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரோனா விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதியப்பட்டுள்ளது.
விராட் கோலி மீது இருந்த மிகுந்த அன்பால் விதிமுறைகளை மீறி உள்ளே சென்றுவிட்டனர். ஆனால் அதற்கு கோலியே எந்தவித கோபமும் படவில்லை, சிரமமும் காட்டவில்லை. எனினும் ரசிகர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதற்கு, கோலி ஏதேனும் குரல் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.