களத்தில் வாக்குவாதம் செய்த பாகிஸ்தான் வீரர்கள்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி கீரெல் பொல்லார்டின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களைச் சேர்த்தது. இஸ்லாமாபாத் அணி தரப்பில் தைமல் மில்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இஸ்லாமாபாத் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை என்றாலும், ஆகா சல்மான் - ஷதாப் கான் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலமும், ஹைதர் அலியின் சிறப்பான ஃபினிஷிங்கின் மூலமாகவும் அந்த அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி வெர்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 9 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகளைச் சந்தித்து 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதன்மூலம் அந்த அணியின் குவாலிஃபையர் சுற்றுக்கான வாய்ப்பும் ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இப்போட்டியின் போது இரு அணி கேப்டன்களும் களத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை கிழப்பியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் இஸ்லாமாபாத் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது முகமது நவாஸ் பந்துவீச்சில் ஆகா சல்மான் காலில் பந்து பட்டது. இதையடுத்து கராச்சி அணி வீரர்கள் நடுவரிடம் எல்பிடபிள்யூவிற்கு முறையிட்டனர். ஆனால் களநடுவர் அதற்கு அவுட் வழங்க மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த கராச்சி கிங்ஸ் அணி கேப்டன் ஷான் மசூத் களநடுவரிடம் முறையிட்டார்.
ஆனால் அப்போது இஸ்லாமாபாத் அணியின் கேப்டன் ஷதாப் கானும் நேரம் அதிகமாவதால் நடுவரிடம் முறையிட்டார். இதனால் கோபமடைந்த ஷான் மசூத், ஷதாப் கானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் களத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் நடுவர்கள் தலையிட்டு அவர்கள் இருவரும் சமாதனப்படுத்தினர். இந்நிலையில் ஷான் மசூத் - ஷதாப் கான் இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.