ஐபிஎல் 2022: தோனி, ஜடேஜாவை திணறவைத்த பதிரனா!

Updated: Sat, Apr 30 2022 14:24 IST
Watch: Junior Malinga Matheesha Pathirana joins CSK, perfectly imitates pacer's action in nets (Image Source: Google)

ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக சொதப்பி, 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.பிளே ஆஃப் செல்ல வேண்டும் என்றால், இனி வரும் 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றாக வேண்டும். மேலும், அந்த 6 போட்டிகளின் இரண்டில் அபார வெற்றியைப் பெற்று, நெட் ரன் ரேட்டையும் உயர்த்தி வைக்க வேண்டும்.

இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. பேட்ஸ்மேன்களில் ஒருவர் சொதப்பினாலும் மற்றவர் சிறப்பாக செயல்பட்டு, ரன்களை சேர்த்து விடுகிறார்கள். இருப்பினும், பந்துவீச்சுதான் அணிக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

முகேஷ் சௌத்ரி, டுவைன் பிரிடோரியஸ் தொடர்ந்து சொதப்பலாக பந்துவீசி வருகிறார்கள். இதனால், பிராவோவும் அழுத்தங்களுடன் பந்துவீசி அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறார். இதனை சரிசெய்யவில்லை என்றால், சிஎஸ்கே இனி வரும் போட்டிகளிலும் தொடர் தோல்விகளை சந்திக்கும் நிலை ஏற்படும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் காயம் காரணமாக வெளியேறிய ஆடம் மில்னேவுக்கு மாற்றாக சேர்க்கப்பட்ட மதீஷா பதிரனா (19), நேற்று நடைபெற்ற பயிற்சியின்போது ‘மலிங்கா ஸ்டெய்லில்’ துல்லியமான யார்க்கர்களை தொடர்ந்து வீசி அசத்தியிருக்கிறார். ஜடேஜா, தோனி உட்பட பலரும் இவரது பந்தை எதிர்கொள்ள முடியாமல் திணறியிருக்கிறார்கள். இதனால், இவருக்கு அடுத்த போட்டியிலேயே வாய்ப்பு கொடுத்தாக வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

பதிரனாவுடன் பிராவோவும் டெத் ஓவர்களில் பந்துவீசினால், எதிரணியினர் ரன்களை சேர்ப்பது கஷ்டம்தான். முகேஷ் சௌத்ரி, ஸ்பின்னர் தீக்ஷனா இருவரும் பவர் பிளேவில் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். இதனால், சிஎஸ்கேவின் பந்துவீச்சு பிரச்சினை முழுவதுமாக தீர்ந்துவிட்டதாக கருதப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இப்போட்டி நாளை இரவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை