முதல் பந்திலேயே 100மீ சிக்ஸரை பறக்கவிட்ட கீரன் பொல்லார்ட் - காணொளி
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், இத்தொடரில் இன்று நடைபெற்ற சேலஞ்சர் சுற்று ஆட்டத்தி ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 59 ரன்களையும், அகீல் ஹொசைன் 55 ரன்களையும், டோனவன் ஃபெரீரா 32 ரன்களையும் சேர்க்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களைச் சேர்த்தது. எம்ஐ நியூயார்க் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிரிஸ்டன் லூஸ் 3 விக்கெட்டுகளையும், ருஷில் உகர்கர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய எம்ஐ நியூயார்க் அணியின் மொனாங்க் படேல் 49 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிகோலஸ் பூரன் 52 ரன்களையும், கீரன் பொல்லார்ட் 47 ரன்களைச் சேர்த்தும் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் எம்ஐ நியூயார்க் அணி 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் நியூயார்க் அணி வீரர் கீரன் பொல்லார்ட் அடித்த ஒரு சிக்ஸரானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இன்னிங்ஸின் 13ஆவது ஓவரை சூப்பர் கிங்ஸ் தரப்பில் நூர் அஹ்மத் வீசிய நிலையில், அந்த ஓவரின் 2ஆவது பந்து மொனாங்க் படேல் விக்கெட்டை இழந்தார். பின்னர் நூர் அஹ்மத் வீசிய மூன்றாவது பந்தை கீரன் பொல்லார்ட் எதிர்கொள்ள களமிறங்கினார். மேலும் இந்த இன்னிங்ஸில் பொல்லார்ட் சந்தித்த முதல் பந்தாகவும் அது அமைந்தது.
Also Read: LIVE Cricket Score
இதனால் பொல்லார்ட் தடுத்து விளையாட முயற்சிப்பார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு நேர் மாறாக கீரன் பொல்லார்ட் பந்துவீச்சாளர் தலைக்கு மேல் இமாலய சிக்ஸரை பறக்கவிட்டார். அந்த சிக்ஸரானது மைதானத்தின் மேற்கூரையைத் தாக்கியதுடன் 100 மீட்டர் தூரமும் சென்றிருந்தது. இந்நிலையில் பொல்லார்ட் விளாசிய இந்த இமாலய சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.