இனி என்னால் விராட் கோலியுடன் ஓட முடியாது - கிளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 49ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இப்போட்டியில் 174 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணி, 8 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் 4ஆவது இடத்திற்கு முன்னேறியது.
முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இதில் முதல் விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்திருந்த போது டு பிளசிஸ் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மேக்ஸ்வெல் தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஓடி ரன்-அவுட் ஆனார்.
ஜடேஜா வீசிய பந்தை விராட் கோலி ஷார்ட் கவரில் தட்டிவிட்டு ஓட முயற்சிக்கையில், எதிர் முனையில் இருந்த மேக்ஸ்வெல் வேகமாக ஓடி வந்தார். அதற்குள் ராபின் உத்தப்பா அந்த பந்தை விக்கெட் கீப்பர் தோனியிடம் 'த்ரோ' செய்ய, மேக்ஸ்வெல் 3 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்த நிலையில் சென்னைக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியை டிரஸ்ஸிங் ரூமில் பெங்களூர் அணி கொண்டாடிய காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் விராட் கோலி டிரஸ்ஸிங் அறையில் மேக்ஸ்வெல்லை வரவேற்றபோது, அவரை 'மிகப்பெரிய காயம்பட்ட வீரர்' என்று கிண்டல் செய்தார்.
இதையடுத்து தனது ரன் அவுட்டை நினைவுகூர்ந்த மேக்ஸ்வெல், இனி விராட் கோலியுடன் பேட் செய்ய மாட்டேன் என்று நகைச்சுவையாக கூறினார். இதுகுறித்து மேக்ஸ்வெல் மேலும் கூறுகையில், ''இனி உங்களுடன் (விராட் கோலி) என்னால் பேட் செய்ய முடியாது. நீங்கள் மிக வேகமாக ஓடுகிறீர்கள். உங்களுக்கு ஒன்றிரண்டு ரன்கள் கிடைக்க நானா கிடைத்தேன்?'' என்று கூறினார்.