SMAT 2024: பேட்டிங்கில் அசத்திய முகமது ஷமி; வைரலாகும் கணொளி!
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தையச்சுற்று ஆட்டத்தில் பெங்கால் மற்றும் சண்டிகர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பெங்கால் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய பெங்கால் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அபிஷேக் போரல் 8 ரன்னிலும், சுதிப் கராமி ரன்கள் ஏதுமின்றியும், காந்தி 10 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு தொடக்க வீரர் கரன் லால் தனது பங்கிற்கு 33 ரன்களையும், விருத்திக் சாட்டர்ஜி 28 ரன்களையும், பிரதிபா 30 ரன்களையும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தின.
இறுதியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் முகமது ஷமி அதிரடியாக விளையாடியதுடன் 17 பந்துகளில் 3 பவுண்டரி இரண்டு சிக்ஸர்கள் என 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையன ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் பெங்கால் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரகளைச் சேர்த்தது. சண்டிகர் அணி தரப்பில் ஜக்ஜித் சிங் 4 விக்கெட்டுகளையும், ராஜ் பாவா 2 விக்கெட்டுக்ளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சண்டிகர் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. இதில் அர்ஸலன் கன் ரன்கள் ஏதுமின்றியும், ஷிவம் பாம்ரி 14 ரன்னிலும், அம்ரித் லுபானா 14 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் கேப்டன் மனன் ஹோராவும் 23 ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த ராஜ் பாவா மற்றும் நிகில் சர்மா இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் ராஜ் பாவா 32 ரன்களையும், நிகில் சர்மா 22 ரன்னிலும் என விக்கெட்டி இழக்க, சண்டிகர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழனது 156 ரன்களை மட்டுமே சேர்த்தது. பெங்கால் அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சயன் கோஷ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் பெங்கால் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் சண்டிகர் அணியை வீழ்த்தியதுடன் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியும் அசத்தியுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இப்போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது அபாரமான பேட்டிங் திறமையின் மூலம் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி 32 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றியில் மிக முக்கிய பங்கினை வகித்தார். இந்நிலையில் முகமது ஷமி அபார ஆட்டத்தை வெளிப்படுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.