பென் ஸ்டோக்ஸின் அசாத்தியமான த்ரோவால் ரன் அவுட் ஆன ஜடேஜா; வைரலாகும் காணொளி!

Updated: Sun, Jan 28 2024 16:39 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 436 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது நிலையில், 190 ரன்கள் முன்னிலையும் பெற்றது. 

இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஒல்லி போப் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய 196 ரன்களைச் சேர்த்ததன் மூலம் அந்த அணி 420 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணிக்கு 231 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்களிலும், ஷுப்மன் கில் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மாவும் 39 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேஎல் ராகுல் 22, அக்ஸர் படேல் 17, ஸ்ரேயாஸ் ஐயர் 13, ரவீந்திர ஜடேஜா 2 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பியதால் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 87 ரன்களைச் சேர்த்த ரவீந்திர ஜடேஜா இந்த இன்னிங்ஸிலும் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால் அவர் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தேவையில்லாமல் சிங்கிள் எடுக்க நினைத்து, பென் ஸ்டோக்ஸின் அபாரமான த்ரோவின் மூலம் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் அபாரமாக செயல்பட்டு ஜடேஜாவை ஆட்டமிழக்கச் செய்த பென் ஸ்டோக்ஸின் காணொளி இணையாத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை