களத்தில் மோதிகொண்ட கில் - சந்தீப்; வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்களை குவிக்க, பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
குஜராத் அணியின் பேட்டிங் சொதப்பலே இந்த போட்டியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. தொடக்க வீரர்கள் விருதிமான் சாஹா 21 ரன்கள், சுப்மன் கில் 9 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 1 ரன், மில்லர் 11 ரனக்ல் என அடுத்தடுத்து வெளியேறினர். டாப் ஆர்டரின் சொதப்பலால் மிடில் ஆர்டரும் நிலைக்கவில்லை.
இந்நிலையில் நல்ல ஃபார்மில் இருந்த சுப்மன் கில் ரன் அவுட்டான விதம் தான் ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்தது. சந்தீப் சர்மா வீசிய 3ஆவது ஓவரில் தான் இந்த சம்பவம் நடந்தது. முதல் பந்தை சுப்மன் கில் கவர் திசையில் அடித்துவிட்டு சிங்கிள் எடுக்க முயன்றார். அவரால் கிறீஸை எட்டியிருக்க முடியும். ஆனால் தடை ஏற்பட்டது.
சுப்மன் கில் வேகமாக ரன் எடுக்க ஓடிய போது, பவுலர் சந்தீப் சர்மா, ஓரமாக நிற்காமல் குறுக்கே நின்றுக்கொண்டிருந்தார். இதனால் சுப்மன் கில் அவர் மீது மோத, சரியான நேரத்தில் கிறீஸை தாண்ட முடியவில்லை. இதில் கடும் ஆத்திரமடைந்த கில், சந்தீப் சர்மாவை பார்த்து அதிருப்தியை தெரிவித்தார்.
இதற்கு சந்தீப் சர்மாவும் " நான் எதுவும் செய்யவில்லை" என்பது போன்று பேச கில் ஆத்திரத்துடன் வெளியேறினார். இருவரின் இந்த பேச்சால் மைதானத்தில் சண்டை வந்துவிடுமோ என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துவிட்டது.
ஒருவேளை நேற்று சுப்மன் கில் ரன் அவுட்டாகாமல் நிலைத்து நின்று ஆடியிருந்தால் குஜராத் அணி நல்ல ஸ்கோரை அடித்திருக்க வாய்ப்புள்ளது. எனினும் குஜராத் டைட்டன்ஸ் ஏற்கனவே 10 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.