ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டி துபாயில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி விராட் கோலியின் அரைசதம்(60) மற்றும் ரோஹித் - ராகுல் அமைத்து கொடுத்த அதிரடியான தொடக்கத்தால் 20 ஓவரில் 181 ரன்கள் அடித்தது.

Advertisement

182 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ரிஸ்வான் 71 ரன்களை குவித்தார். 4ஆம் வரிசையில் இறங்கிய முகமது நவாஸ், இந்திய பவுலிங்கை அடித்து நொறுக்கி அருமையான கேமியோ ரோல் பிளே செய்தார். 20 பந்தில் 42 ரன்களை விளாசிய நவாஸின் பேட்டிங் தான், பாகிஸ்தான் அணிக்கு பெரிய பலமாக அமைந்தது.

Advertisement

அதன்பின்னர் ஆசிஃப்  அலியும், குஷ்தில் ஷாவும் சிறப்பாக ஆடி பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். கடைசி ஓவரில் இலக்கை அடித்து பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பல சம்பவங்கள் பாதகமாக அமைந்தன. சாஹல் ரன்களை வாரி வழங்கியது, 18ஆவது ஓவரில் அர்ஷ்தீப் சிங் கேட்ச்சை விட்டது, 19ஆவது ஓவரில் புவனேஷ்வர் குமார் 19 ரன்களை வழங்கியது என பவுலிங், ஃபீல்டிங்கில் பல சொதப்பல். பேட்டிங்கிலும் சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் சோபிக்காதது பின்னடைவு.

இந்திய அணி செய்த தவறுகளில் பெரும் தவறு, அர்ஷ்தீப் சிங் கேட்ச்சை கோட்டை விட்டது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது ரவி பிஷ்னோய் வீசிய 18ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் ஆசிஃப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங். ஷார்ட் தேர்டு மேன் திசையில் மிகவும் எளிமையான அந்த கேட்ச்சை அர்ஷ்தீப் சிங் தவறவிட்டார். 

இதையடுத்து புவனேஷ்வர் குமார் வீசிய 19ஆவது ஓவரில் ஆசிஃப் அலியும் குஷ்தில் ஷாவும் இணைந்து 19 ரன்களை விளாசினர். அந்த ஓவரிலேயே கிட்டத்தட்ட போட்டி முடிந்துவிட்டது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 7 ரன் தான் தேவைப்பட்டது. அதை எளிதாக அடித்து பாகிஸ்தான் வெற்றி பெற்றுவிட்டது.

 

Advertisement

அர்ஷ்தீப் ஆசிஃப் அலியின் கேட்ச்சை பிடித்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கக்கூடும். அர்ஷ்தீப் சிங் கோட்டைவிட்டது கேட்ச்சை அல்ல; மேட்ச்சை என்பது தான் உண்மை. ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் எளிமையான கேட்ச்சை அர்ஷ்தீப் கோட்டைவிட, கேப்டன் ரோஹித் சர்மா கடுங்கோபமும் அதிருப்தியும் அடைந்தார். களத்தில் நெருக்கடியான சூழல்களையும் கூலாக கையாளும் ரோஹித் சர்மா கோபமடைந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News