மைதான ஊழியரிடம் கோபத்தைக் காட்டிய ருதுராஜ்; நெட்டிசன்கள் விளாசல்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் வாய்ப்பு இருந்தது. இதனால், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்த நிலையில், போட்டி தொடங்கியது முதல் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இஷான் கிஷனும், ருதுராஜ் கெய்க்வாட்டும் இந்திய அணிக்காக ஓப்பனிங் களமிறங்கினர். ஐபிஎல் போட்டியில் மோசமான ஃபார்மில் இருந்த இஷான் கிஷன், இந்திய அணிக்காக இந்த தொடரில் களமிறங்கியபோது சிறப்பாக ஆடினார்.
இந்தப் போட்டியில் சிக்சர் அடித்து தன்னுடைய ரன் கணக்கை தொடங்கினார். அவரின் அதிரடியால் இந்திய அணியின் ரன் கணக்கும் முதல் ஓவரிலேயே 10 ரன்களை கடந்து கம்பீரமாக இருந்தது.
ஆனால், அடுத்த ஓவரில் நிகிடி வீசிய ஸ்லோ பந்துவீச்சில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்து வெளியேறினார். ஒன்டவுன் ஸ்ரேயாஸ் அய்யர் களமிற்ஙிகனார். அப்போது, திடீரென மழை பெய்யத் தொடங்கியது. உடனடியாக நிறுத்தப்பட்ட போட்டி சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கியது.
மீண்டும் களமிறங்கிய இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், அவுட்டாகி வெளியேற, மீண்டும் மழை வந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. முதன்முறை மழை பெய்தபோது மைதானத்துக்கு வெளியே வீரர்களுக்கான கூரைக்குள் அமர்ந்திருந்த ருதுராஜ்ஜூடன், மைதான ஊழியரும் அருகில் வந்து அமர்ந்தார்.
அப்போது, திடீரென கோபப்பட்ட அவர், அந்த ஊழியரை தள்ளி உட்கார வைத்தார். இந்த காணொளி தற்போது சமூகவலைதளங்களில் பரவியுள்ளது. நெட்டிசன்களும் ருதுராஜ் கெய்கவாட்டின் நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தையும், விமர்சனத்தையும் முன்வைத்து வருகின்றனர்.