எஸ்ஏ20 2025: அபாரமான கேட்சைப் பிடித்த முத்துசாமி; வைரலாகும் காணொளி!
எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய மார்கோ ஜான்சன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கோ ஜான்சென் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுட 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினார். இதனால் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரிட்டோரியா கேப்பிட்டல் தரப்பில் டேரின் டுபாவில்லன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 7 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய கைல் வெர்ரைன் 12 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து 27 ரன்களில் வில் ஜேக்ஸும், 12 ரன்களில் கேப்டன் ரைலீ ரூஸோவ் 12 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் கேப்பிட்டல்ஸ் அணி 61 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் இணைந்த லிவிங்ஸ்டோன் - ஆக்கர்மென் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அக்கெர்மேன் 39 ரன்களையும், லிவிங்ஸ்டோன் 14 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் பிரிட்டோரியா அணி வீரர் சேனுரன் முத்துசாமி பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி இன்னிங்ஸின் 12ஆவது ஓவரை முத்தாசமி வீசினார். அப்போது அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட பேட்ரிக் குரூகர் பவுலர் தலைக்கு மேல் பவுண்டரி அடிக்கு முயற்சியியில் அந்த பந்தை நேரடியா அடித்தார். மேலும் அவரது ஷாட்டும் கட்சிதமாக இருந்ததால், பந்து புல்லட்டை போல் சென்றது.
Also Read: Funding To Save Test Cricket
அப்போது பந்துவீசி முடித்த கையோடு சேனுரன் முத்துசாமி அந்த பந்த கேட்ச் பிடித்தும் அசத்தினார். இதனால் ஒருகணம் என்ன நடந்தது என்ற தெரியாமல் பேட்ரிக் குரூகர் வியப்பில் ஆழ்ந்தார். மேற்கொண்டு இதனைக் கண்ட ரசிகர்களாலும் நம்பமுடியவில்லை. இதையடுத்து 10 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பேட்ரிக் க்ரூகர் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் சேனுரன் முத்துசாமி பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.