மாயாஜால பந்துவீச்சு மூலம் பேட்டர்களை ஸ்தம்பிக்க வைத்த வருண் சக்ரவர்த்தி - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடான் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்தவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 57 ரன்களையும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 44 ரன்களையும், இறுதியில் ரிங்கு சிங் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 19 ரன்களையும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் கேகேஆர் அணி இன்னிங்ஸ் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 206 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் தீக்ஷனா, பராக் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அபாரமாக விளையாடிய ரியான் பராக் 6 பவுண்டரி 8 சிக்ஸர்களுடன் 95 ரன்னிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 34 ரன்னிலும், ஷிம்ரான் ஹெட்மையர் 29 ரன்னிலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷுபம் தூபே 25 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்களை மட்டுமே எடுத்தது.
கேகேஆர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடருக்கான பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் கேகேஆர் அணி வீரர் வருண் சக்ரவர்த்தி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்தார். அந்தவகையில் இன்னிங்ஸின் 8ஆவது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீசிய நிலையில் ஓவரின் நான்காவது பந்தை துரூவ் ஜூரெல் எதிர்கொண்டார். அப்போது வருண் வீசிய பந்தை கணிக்க தவறிய துருவ் ஜூரெல் பந்தை தவறவிட்டதுடன் க்ளீன் போல்டாகியும் பெவிலியன் திரும்பினார்.
Also Read: LIVE Cricket Score
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வநிந்து ஹசரங்காவும் அதே ஓவரின் 5ஆவது பந்தை சரியாக கணிக்க தவறியதுன் க்ளீன் போல்டாகினார். இதன்மூலம் ஓவரின் தொடக்கத்தில் 66-3 என்று இருந்த ராஜஸ்தான் அணி அந்த ஓவரின் முடிவில் 72-5 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் வருன் சக்ரவர்த்தி தனது ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைபற்றிய கணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.