மூன்றாம் நடுவரின் சர்ச்சை முடிவு; கடுப்பான கோலி, அஸ்வின்!
கேப்டவுனில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 211 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் ஏய்டன் மர்க்ரம் 16 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார்.
இதனால் இந்திய அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்காவின் தூணாக பார்க்கப்பட்ட கேப்டன் டீன் எல்கர் 22 ரன்களுக்கு வெளியேறியிருக்க வேண்டும். அவர் அவுட்தான் என அனைவரும் நம்பினர். ஆனால் டி ஆர் எஸில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தார் 3ஆவது நடுவர்.
ஆட்டத்தின் 20 ஓவரில் அஸ்வின் வீசிய பந்தில் டீன் எல்கர் எல்.பி.டபள்யூ அவுட் ஆனார். கள நடுவரும் அதற்கு அவுட் கொடுத்துவிட்டார். ஆனால் டீன் எல்கர் 3ஆவது நடுவரிடம் ரிவ்யூவ் கேட்டார். "யாருப்பா இவரு.. இவ்வளவு கீழாக சென்ற பந்திற்கு ரிவ்யூவ் கேட்கிறாரே என பலரும் நகைத்தனர்". ஆனால் பந்து ஸ்டம்பில் பட்டிருக்காது, விக்கெட் மிஸ்ஸிங் என்பது போன்ற வீடியோவை கான்பித்து நாட் அவுட் கொடுக்கப்பட்டது.
ஒரு சுழற்பந்துவீச்சாளர் போட்ட பந்தானது எப்படி திடீரென பவுன்சாகி ஸ்டம்பிற்கு மேல் எழுந்தது என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. டி.ஆர்.எஸில் காண்பித்தது போன்று பவுன்சாகி இருக்க வேண்டும் என்றால், அஸ்வின் 8 அடி உயரத்தில் இருந்து 120+ கிமீ வேகத்தில் பந்தை வீசியிருந்தால் தன முடியும் என ரசிகர்கள் மற்றும் வல்லுநர்கள் கூறினர்.
இதனால் மூன்றாம் நடுவர் டி.ஆர்.எஸ் முடிவில் ஏமாற்று வேலை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனை கண்டு அதிருப்தியடைந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்டம்ப் மைக்கிற்கு அருகில் வந்து, "இதுபோன்ற மிகப்பெரிய போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் வேறு நல்ல வழி இருந்தால் பாருங்கள்" என சாடினார்.
அதே போல விராட் கோலியும் ஸ்டம்ப் மைக்கில் " உங்கள் அணியினரும் ( தென் ஆப்பிரிக்கா) அவ்வபோது பந்தை சேதப்படுத்துகின்றனர்.. அதையும் பாருங்கள்.. எதிரணியை மட்டும் பார்க்க வேண்டாம்.. எப்போதும் அனைத்து இடங்களையும் நியாயமாக பார்வையிடுங்கள்" எனக்கூறினார்.
எல்கருக்கு நாட் அவுட் கொடுத்த இந்த விவகாரம் ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையாக இருந்தது. அந்த நிகழ்வில் இருந்து 50 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துவிட்டனர். இதனால் இந்திய வீரர்கள் ஏமாற்றமடைந்தனர்.