தன்னை அவுட்டாக்க விடாமல் தடுத்த மேத்யூ வேட்; கடுப்பான் இங்கிலாந்து வீரர்கள் - வைரல் காணொளி!

Updated: Sun, Oct 09 2022 22:50 IST
Image Source: Google

பொதுவாகவே ஆஸ்திரேலிய வீரர்கள் அணியின் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். ஸ்லெட்ஜிங்கிற்கு பெயர்போனவர்களே அவர்கள் தான். வீழ்த்த முடியாத வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்து, மனரீதியாக அவர்களை நிலையாக இருக்கவிடாமல் செய்து வீழ்த்தும் உத்தியில் அவர்களை மிஞ்ச யாராலும் முடியாது.

அதை மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறார் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட். ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 208 ரன்களை குவிக்க, 209 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 200 ரன்கள் அடித்து 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் 209 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி வீரர் மேத்யூ வேட் 15 பந்தில் 21 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 17ஆவது ஓவரை மார்க் உட் வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தை பவுன்ஸராக வீசினார் மார்க் உட். அதை வேட் அடிக்க, பந்து அங்கேயே உயரே எழும்பியது. 

விக்கெட் கீப்பர் பட்லர் மற்றும் பவுலர் மார்க் உட் இருவருமே அந்த பந்தை கேட்ச் பிடிக்க ஓடிவந்தனர். பந்து எங்கே சென்றது என்பதை அறியாத வேட் ரன் ஓட முயற்சித்து இரண்டு அடி முன்னே சென்றார். பின், மார்க் உட் ஓடிவருவதை பார்த்து, மீண்டும் க்ரீஸை நோக்கி ஓடிவந்தார். 

அப்போது மார்க் உட் ஏதோ ஒருவகையில் தன்னை அவுட்டாக்க(கேட்ச் பிடிக்கத்தான் வருகிறார் என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை) ஓடிவருகிறார் என்பதை தெரிந்துகொண்டு கையை நீட்டி மார்க் உட்டை மறைத்தார்.

இதையடுத்து பட்லர், மார்க் உட் உட்பட மொத்த இங்கிலாந்து அணியும் அதிருப்தியடைந்தது. ஆனால் அம்பயரிடம் அப்பீல் செய்யவில்லை. ஒருவேளை அப்பீல் செய்திருந்தால் விதிப்படி வேட் அப்போதே ஆட்டமிழந்திருப்பார். மேத்யூ வேடின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் வேட் மீது தவறான அபிப்ராயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ரசிகர்கள் மேத்யூ வேடின் செயலையும், பொதுவாகவே ஆஸ்திரேலியர்கள் தன்மைகள் மற்றும் செயல்பாடுகளையும் விமர்சித்துவருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை