மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சி ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தியது இந்தியா!

Updated: Mon, Sep 30 2024 09:52 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணி தற்சமயம் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்தவகையில் இந்திய மகளிர் அணியானது நேற்றைய தினம் வெஸ்ட் இண்டீஸ் மகளீர் அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா 7 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிதிருதி மந்தனாவும் 14 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். 

இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் யஷ்திகா பாட்டியா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் 24 ரன்கள் எடுத்த நிலையில் யஷ்திகா பாட்டியாவும், 7 ரன்களில் ரிச்சா கோஷும் தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். மேற்கொண்டு 52 ரன்களைக் கடந்து விளையாடி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸும் தனது விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சோபிக்க தவறிய காரணத்தல், இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை மட்டுமே சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்டன் ஹீலி மேத்யூஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார், பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கும் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஹீலி மேத்யூஸ், கியானா ஜோசப், செடான் நேஷன் உள்ளிட்ட வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் இணைந்த ஷெமைன் காம்பெல் - சினெல்லே ஹென்றி இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் காம்பெல் 20 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சினெல்லே ஹென்றி தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 59 ரன்களை சேர்த்தார். ஆனால் மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, விண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை