ஐசிசி போட்டி அட்டவணையை விமர்சித்த ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து கிரிக்கெட் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளார். பணிச்சுமையை குறைத்து டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை வழிநடத்துவதில் கவனம் செலுத்த இருப்பதாகவும் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், ''என்னால் 50 ஓவர் கிரிக்கெட்டில் 100 சதவிகித பங்களிப்பை அணிக்கு தரமுடியவில்லை. இதனால் தான் இப்படிப்பட்ட கடுமையான முடிவை நான் எடுத்தேன். இங்கிலாந்துக்காக நான் விளையாடிய ஒவ்வொரு நிமிடமும் எனக்கு பொன்னான ஒன்று. 3 வடிவ கிரிக்கெட்டிலும் ஒரே சமயத்தில் என்னால் கையாள முடியவில்லை. உடல் ஒத்துழைக்கவில்லை என்பது மட்டும் காரணம் அல்ல. போட்டி அட்டவணைகளும் அடுத்தடுத்து உள்ளதால் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே எனது இடத்தை வேறு யாருக்கேனும் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.
நீங்கள் பெட்ரோல் நிரப்பிவிட்டு அனுப்பும் கார்கள் அல்ல நாங்கள். இது எங்கள் மீதும், விளையாடுவதிலும், பயணம் செய்வதிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நான் சொன்னது போல், இந்த நேரத்தில் அட்டவணை மிகவும் நெரிசலானது. மேலும் பல வீரர்கள் அவர்கள் களத்தில் இறங்கும் ஒவ்வொரு முறையும் 100% முயற்சியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். எனினும் இந்த 11 வருட கிரிக்கெட் பயணம் மிக அழகான அனுபவங்களை கொடுத்துள்ளது'' என கூறியுள்ளார்.
தற்போது 31 வயதாகும் பென் ஸ்டோக்ஸ் இதுவரை 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,919 ரன்களை குவித்திருக்கிறார். அவரது பந்துவீச்சு சராசரி 41.79ஆகவும், பேட்டிங் சராசரி 39.44ஆகவும் உள்ளது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக பென் ஸ்டோக்ஸ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.