ஒலிம்பிக் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட்கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்தது. நேற்றைய 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் போட்டி டிரா ஆனது. மழையால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பும் பறிபோனதாக கருதப்படுகிறது.
இந்தியாவின் வெற்றிக்கு மேலும் 157 ரன் தேவை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் கடைசி நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டதாகும். இதனால் இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டது.
கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறும்போது, “கடைசி நாளில் போட்டி நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நடக்காமல் போனது வருத்தம் அளிக்கிறது. இந்த டெஸ்டில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்ததை அறிவோம். நிச்சயம் எங்கள் கைதான் ஓங்கி இருந்தது” என்றார்.
இதற்கிடையே ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளை விராட் கோலி தனது பாராட்டை தெரிவிதுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கும், பங்கேற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
வெற்றி, தோல்வி விளையாட்டின் ஒரு பகுதியாகும். ஆனால் நீங்கள் நாட்டுக்காக உங்கள் பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். உங்களால் நாடு பெருமையடைகிறது. இனி வரும் காலங்களில் நீங்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.