கடைசி ஓவர்களில் கூடுதலாக ரன்கள் விட்டுகொடுத்துவிட்டோம் - சஞ்சு சாம்சன்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில்இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் போரல் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை களமிறங்கினர்.
இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபிரேசர் மெக்குர்க் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால், 50 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவர் விக்கெட்டையும் இழக்க, அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் போரல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதன்பின் அதிரடியாக விளையாடி அபிஷேக் போரல் 65 ரன்களிலும், ரிஷப் பந்த் 15 ரன்களில் பெவிலியன் திரும்ப அடுத்து களமிறங்கிய குல்பதீன் நைப் 19 ரன்களுக்கு விக்க்ர்ட்டை இழந்தார். ஆனாலும் இறுதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 ரன்களிலும், ரஷீக் சலாம் 9 ரன்களிலும் விக்கெட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி 221 ரன்களை குவித்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் அபாராமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினர். அவருக்கு துணையாக ரியான் பராக் 27 ரன்களையும், ஷுபம் துபே 25 ரன்களைச் சேர்த்தனர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் சதத்தை நோக்கி நர்ந்த நிலையில் 86 ரன்களை எடுத்த போது சர்ச்சையான முறையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரரளாலும் இலக்கை எட்ட முடியாததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், “இந்த போட்டி எங்கள் கைவசம் தான் இருந்தது. ஒரு ஓவருக்கு 11 முதல் 12 ரன்கள் எடுத்தால் போதுமானது என்ற ரன் ரேட்டே இருந்ததால் இந்த இலக்கை எங்களால் எளிதாக எட்ட முடியும் என்றே நினைத்தோம். ஆனால் ஐபிஎல் போன்ற தொடரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நாங்கள் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பாகவே செயல்பட்டோம். ஆனால் பந்துவீச்சில் நாங்கள் 10 ரன்கள் கூடுதலாக வழங்கிவிட்டோம் என்று நினைக்கிறோம். அதிலும், கடைசி ஓவர்களில் கூடுதலாக ரன்கள் விட்டுகொடுத்துவிட்டோம்.
டெல்லி அணியின் தொடக்க வீரரான ஃபிரேசர் மெக்குர்க் தனது வேலையை சரியாக செய்து கொடுத்தார். அவரது அதிரடி ஆட்டத்திற்கு பின்பும் சிறப்பாக பந்துவீசி போட்டியை மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தோம். ஆனால் டிரிஸ்டன் ஸ்டப்ஸின் பேட்டிங் அனைத்தையும் மாற்றிவிட்டது. அவர் விளையாடிய விதத்தை பாராட்டியே ஆக வேண்டும். நாங்கள் தோல்வியடைந்துள்ள மூன்று போட்டியிலுமே வெற்றிக்காக கடைசி வரை போராடி வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியை சந்தித்துள்ளோம். இதனால் எங்கள் தவறுகளை கண்டறிந்து மீன்டும் முன்னேற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.