நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை - ரஜத் பட்டிதார்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக தோல்விகளை தழுவாமல் 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்தது. அதேசமாயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இரண்டாவது தோல்வியைப் பெற்று புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தில் தொடர்கிறது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார், “நாங்கள் விக்கெட்டைப் பார்த்த விதம் மிகவும் வித்தியாசமாக இருந்தது என்று நினைக்கிறேன், இது ஒரு நல்ல பேட்டிங் விக்கெட் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. பேட்டர்கள் அதிக நம்பிக்கையுடன் இருந்தாக நான் நினைக்கவில்லை, ஒவ்வொரு பேட்டர்களும் நல்ல மனநிலையில் இருந்தனர், சரியான நோக்கத்தைக் காட்டினர்.
ஆனால் 80 ரன்களில் ஒரு விக்கெட்டை இழந்திருந்த நிலையில் அடுத்த 10 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. எங்களிடம் நல்ல பேட்டிங் வரிசை உள்ளது, ஆனால் நிலைமையை மதிப்பிட வேண்டும். அது நேர்மறையானது, டிம் டேவிட் வேகத்தை அதிகரித்த விதம் ஆச்சரியமாக இருந்தது, பவர்பிளேயில் பந்துவீச்சு சிறப்பு வாய்ந்தது.ஆனால் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும், அதை எளிமையாக வைத்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் பில் சால்ட் 37 ரன்களையும், விராட் கோலி 22 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 37 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் விப்ராஜ் நிகம் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பிய நிலையில், கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி 93 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.