இனிதான் மிகப்பெரும் சவால் காத்துள்ளது - டெம்பா பவுமா!

Updated: Sat, Nov 11 2023 12:15 IST
இனிதான் மிகப்பெரும் சவால் காத்துள்ளது - டெம்பா பவுமா! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் தகுதிப்பெற்றுள்ள நிலையில் நியூசிலாந்து அணியும் தங்களது வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அஸ்மதுல்லா ஷாஹிதி 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 97 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 47.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஸ்ஸி வேண்டர் டுசென் 76 ரன்களையும், பெஹ்லுக்வாயோ 39 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா, “எனது கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் எத்தனை நாட்கள் காயமிருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் கூடிய விரைவில் சரியாகும் என்று நம்புகிறேன். இந்த போட்டியில் அணியினருடன் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் காயமிருந்தாலும் ஃபீல்டிங்கின் போது மீண்டும் வந்தேன். வெற்றி என்பது ஒரு பழக்கமாக மாற வேண்டும்.

இந்த வெற்றியை அடுத்தடுத்த போட்டிகளில் தொடர விரும்புகிறோம். இன்றைய ஆட்டத்தில் சேஸிங் செய்து சிறந்த வெற்றியை பெற்றுள்ளோம். இது எங்கள் அணி வீரர்களின் மனதில் மிகப்பெரிய நம்பிக்கை விதைத்துள்ளது. வான் டர் டஸன் மிகச்சிறந்த இன்னிங்ஸை ஆடியுள்ளார். அதேபோல் அவரை சுற்றி பேட்ஸ்மேன்கள் ஆடிய விதத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டாவது பேட்டிங்கின் போது ஆடுகளம் சிறியளவில் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது.

அகமதாபாத் மைதானத்தில் மீண்டும் விளையாட விரும்புகிறோம். அதற்கு முன்பாக மிகப்பெரிய சவால் ஒன்று உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடக்கவுள்ளது. அதில் வென்று மீண்டும் இதே மைதானத்தில் நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் விளையாட விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை