விராட் கோலியுடன் மோத வேண்டும் என்பதற்காக அப்படி செய்யவில்லை - நவீன் உல் ஹக்!

Updated: Sat, Nov 18 2023 11:49 IST
விராட் கோலியுன் மோத வேண்டும் என்பதற்காக அப்படி செய்யவில்லை - நவீன் உல் ஹக்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் போது லக்னோ அணிக்காக விளையாடிய நவீன் உல் ஹக் மற்றும் ஆர்சிபி அணிக்காக விளையாடிய விராட் கோலி இருவரும் மோதிக் கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் நவீன் உல் ஹக் எப்போது எந்த மைதானத்தில் விளையாடினாலும் விராட் கோலி பெயர் எதிரொலித்து கொண்டே இருந்தது.

இதனால் உலகக்கோப்பை தொடரில் நவீன் உல் ஹக் - விராட் கோலி இடையிலான யுத்தத்திற்கு ரசிகர்கள் காத்திருந்தனர். டெல்லியில் நடைபெற்ற ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போதும் நவீன் உல் ஹக் பவுலிங் செய்ய வந்த போது விராட் கோலி பெயரை கொண்டு ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது உடனடியாக விராட் கோலி, நவீன் உல் ஹக்கை கட்டியணைத்து அவருக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து நவீன் உல் ஹக் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட போது, அவரின் பெயரை கொண்டு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக விராட் கோலியின் சொந்த மண்ணான டெல்லியிலேயே இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ரசிகர்கள் நவீன் உல் ஹக் பந்துவீசிய போது ஆதரவாக கோஷம் எழுப்பினார்கள்.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் கிடைத்த ஆதரவு குறித்து நவீன் உல் ஹக் அளித்துள்ள பேட்டியில், “இந்திய அணிக்கு எதிரான போட்டியின் போது திடீரென விராட் கோலி என்னை அழைத்து, இதனை முடிவுக்கு கொண்டு வருவோமா? என்றார். அதற்கு நானும், ஆமாம்.. முடித்து கொள்வோம் என்றேன். அப்போது உடனடியாக இருவரும் சிரித்து கட்டியணைத்து நட்பு பாராட்டி விலகினோம்.

அதன் பின் விராட் கோலி என்னிடம், இதன்பின் நீ எனது பெயரை மைதானத்தில் கேட்க மாட்டாய். இனி உனது பெயரை கோஷமாக கேட்பாய் என்று கூறினார். விராட் கோலி கூறியதை, அடுத்தடுத்த போட்டிகளில் உணர்ந்தேன். விராட் கோலியுன் மோத வேண்டும் என்பதற்காக அப்படி செய்யவில்லை. நான் எனது சக வீரருக்கு ஆதரவாக நின்றேன்.

கிளப் கிரிக்கெட், லீக் போட்டிகள், ஆஃப்கானிஸ்தான் அணி என்று எந்த அணிக்காக ஆடினாலும் சக வீரருக்காக நிற்க வேண்டும். அதற்காக தான் நாங்கள் ஒரு அணியாக விளையாடுகிறோம். இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளுக்கும் ரசிகர்கள் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவை அளித்தார்கள். சொந்த மண்ணில் ஆடுவது போன்ற மகிழ்ச்சி இருந்தது. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தான் எங்களுக்கு ஆதரவு இல்லை” என தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை