ENG vs WI, 2nd ODI: ஜோ ரூட்டின் அபார சதத்தால் விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!

Updated: Mon, Jun 02 2025 00:04 IST
Image Source: Google

:இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கார்டிஃபில் உள்ள சோஃபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் மற்றும் ஜுவெல் ஆண்ட்ரூ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜுவெல் ஆண்ட்ரூ ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் பிராண்டனுடன் ஜோடி சேர்ந்த கேசி கார்டி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் இருவரும் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 10 பவுண்டரிகளுடன் 59 ரன்களைச் சேர்த்திருந்த பிராண்டன் கிங் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து கேசி கார்டியுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப்பும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேசி கார்டி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 4ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். 

பின்னர் 13 பவுண்டரிகளுடன் 103 ரன்களை எடுத்திருந்த கேசி கார்டி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் இங்கிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருப்பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் அரைசதம் கடந்ததுடன் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 78 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், சாகிப் மஹ்மூத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் மற்றும் ஜேமி ஸ்மித் இருவரும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் கேப்டன் ஹாரி புரூக் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன் தேவைப்படும் சமயங்களில் பவுண்டரிகளையும் அடித்து ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

பின்னர் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 47 ரன்களில் ஹாரி புரூக் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் ரன்கள் ஏதுமின்றியும், ஜேக்கப் பெத்தல் 17 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் வில் ஜேக்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 17ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து மிரட்டினார். அதேசமயம் வில் ஜேக்ஸ் 49 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதத்தை தவறவிட்டார்.

Also Read: LIVE Cricket Score

ஒருப்பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் நங்கூரம் போல் நின்று விளையாடிய ஜோ ரூட் 21 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 166 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஜோ ரூட் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை