இப்போட்டில் நாங்கள் 20 ரன்கள் குறைவாகவே எடுத்தோம் - ரியான் பராக்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் துருவ் ஜூரேல் 33 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகியோர் தலா 25 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. கேகேஆர் தரப்பில் வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணியில் மொயீன் அலி 5 ரன்னிலும், கேப்டன் அஜிங்கியா ரஹானே 18 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குயின்டன் டி காக் 8 பவுண்டரி 6 சிக்ஸர்கள் என 97 ரன்களையும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 22 ரன்களையும் சேர்த்து வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ரியான் பராக், “170 ரன்கள் என்பது உண்மையிலேயே நல்ல ஸ்கோராக இருக்கும், அதைத்தான் நாங்கள் இலக்காகக் கொண்டிருந்தோம். விக்கெட்டை அறிந்து நான் கொஞ்சம் அவசரப்பட்டு விளையாடிவிட்டேன். அதனால் இப்போட்டில் நாங்கள் 20 ரன்கள் குறைவாகவே எடுக்க முடிந்தது. மேற்கொண்டி டி காக்கின் விக்கெட்டை சீக்கிரம் கைபற்ற வேண்டும் என்று நினைத்தோம், ஆனால் அது நடக்கவில்லை.
எனவே, நாங்கள் மிடில் ஓவர்களில் கட்டுப்படுத்தும் நிலைக்கு மாறினோம். அவர் மிகவும் நன்றாக விளையாடினார், எனவே அவருக்கு பாராட்டுகள். கடந்த ஆண்டு, அணி நான் 4ஆவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பியது, நான் அதைச் செய்வதில் மகிழ்ச்சியாயிருந்தேன். இந்த ஆண்டு, அவர்கள் என்னை 3ஆவது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்புகிறார்கள், எனவே அணி எங்கு வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய நான் தொழில்முறை நிபுணராக இருக்க வேண்டும். அதனால் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket