ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் - ஸ்மிருதி மந்தனா!
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று வதோதராவில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் கேபி லூயிஸ் 92, லியா பால் 59 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளை விழ்த்தினார். இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மந்தனா- பிரதிகா களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் ஸ்மிருதி மந்தனா 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஹர்லீன் தியோல் 20, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 என ஆகியோரும் விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் அபாரமாக விளையாடிய பிரதிகா ராவல் 89 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தேஜல் ஹசாப்னிஸ் 53 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, “இதுபோன்ற அதிக ஸ்கோரிங் விக்கெட்டுகளில் எங்கள் அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் நாங்கள் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும். ஏனெனில் நாங்கள் சிறப்பாக ஃபீல்டிங் செய்திருந்தால் இப்போட்டியில் அயர்லாந்து அணியை 180 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். இனிவரும் போட்டிகளில் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்படுவோம்.
Also Read: Funding To Save Test Cricket
பேட்டிங்கைப் பொறுத்தவரையில் பிரதிகா மற்றும் தேஜல் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் குறிப்பாக தேஜல் போட்டியை இறுதிவரை நின்று முடித்துகொடுதார். எங்கள் பேட்டர்கள் செயல்பட்ட விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். போட்டிகளின்போது, எங்களது திட்டங்களை சரிவர செயல்படுத்துவது மிகவும் முக்கியம். அதனால் அடுத்தடுத்த போட்டிகளிலும் சரியான விஷயங்களை பின்பற்றி வெற்றிபெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.