இது போன்ற ஒரு டி20 தொடரை நாங்கள் விளையாடியது இல்லை - இப்ராஹிம் ஸத்ரான்!

Updated: Thu, Jan 18 2024 12:48 IST
இது போன்ற ஒரு டி20 தொடரை நாங்கள் விளையாடியது இல்லை - இப்ராஹிம் ஸத்ரான்! (Image Source: Google)

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் அபார வெற்றியைப் பெற்ற இந்திய அணி, பெங்களூரில் மூன்றாவது போட்டியில் களமிறங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, முதலில் படுமோசமாக சொதப்பி, இறுதியில் மிரட்டலாக விளையாடி ரன் மழை பொழிந்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து படுமோசமாக திணறியது. யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 4, விராட் கோலி 0, ஷிவம் துபே 1, சஞ்சு சாம்சன் 0 ஆகியோர் அடுத்தடுதுத ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். இதனால், இந்திய அணி 4.3 ஓவர்களிலேயே 22/4 என படுமோசமாக தடுமாறியது. இதனால், இந்திய அணி, 120 ரன்களை அடித்தாலே அது பெரிய விஷயமாக இருக்கும் எனக் கருதப்பட்டது. 

அடுத்து, ரிங்கு சிங் மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் அவுட் ஆகவே இல்லை. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 212/4 ரன்களை குவித்தது. ரோஹித் 121 ரன்களையும், ரிங்கு சிங் 69 ரன்களையும் சேர்த்தனர். பின்னர் இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி, துவக்கம் முதலே ரன்களை சேர்ப்பதில் தீவிரம் காட்டி வந்தது. 

அணியின் தொடக்க வீரர்கள் குர்பஸ் 50, இப்ராஹிம் ஸத்ரான் 50 இருவரும் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார்கள். இதனைத் தொடர்ந்து, அஜ்மதுல்லா 0, கரீம் ஜனத் 2 போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து சொதப்பினார்கள். இறுதியில், குல்பதீன் மற்றும் முகமது நபி ஆகியோர் அதிரடியாக விளையாடினர். இதனைத் தொடர்ந்து, நபி 34 ஆட்டமிழக்க ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறியது.

இறுதியில், ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றியைப் பெற கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டபோது, முகேஷ் குமார் 18 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதனால், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 212/6 ரன்களை எடுத்து ஆட்டத்தை டிரா செய்தது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த குல்பதீன் 55 கடைசிவரை களத்தில் இருந்தார். இதையடுத்து ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது

சூப்பர் ஓவரில் இரு அணிகளும் தலா 16 ரன்களை அடித்த நிலையில், இரண்டாவது சூப்பர் ஓவர் நடைபெற்றது. இதில், இந்திய அணி 11 ரன்களை எடுத்தது. இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு ரன்னை மட்டும் சேர்த்து, தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த பரபரப்பான போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான், “ஒட்டுமொத்தமாகவே இந்த போட்டி மிகச் சிறப்பாக இருந்தது. நாங்கள் இந்த போட்டியில் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். 

இருப்பினும் இறுதியில் சூப்பர் ஓவரில் வந்து நாங்கள் தோல்வியை சந்தித்தது சற்று வருத்தமளிக்கிறது. இருந்தாலும் இந்த தொடரின் மூலம் கிடைத்த அனுபவங்களை அப்படியே டி20 உலக கோப்பை தொடருக்கு கொண்டு செல்ல உதவும் என்று கருதுகிறேன். இது போன்ற ஒரு டி20 தொடரை நாங்கள் விளையாடியது இல்லை. இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக நாங்கள் நல்ல முறையில் விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாக” கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை