ஐபிஎல் 2022: தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் - கேன் வில்லியம்சன்!
15ஆவது ஐபிஎல் தொடரின் 12ஆவது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.
மும்பை டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 68 ரன்களும், தீபக் ஹூடா 51 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ராகுல் திரிபாதி 44 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 34 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் லக்னோ அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.
இந்தநிலையில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான இந்த வெற்றி குறித்து பேசிய ஹைதராபாத் அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன், ஹைதராபாத் அணி தோல்வியில் இருந்து மீண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய கேன் வில்லியம்சன், “பந்துவீச்சின் போது துவக்கத்தில் நாங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு லக்னோ அணியின் மூன்று விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திவிட்டோம். ஆனால் கே.எல் ராகுல் – தீபக் ஹூடா கூட்டணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டது, அவர்களது கூட்டணியை விரைவாக பிரித்திருந்தால் போட்டி எங்களுக்கு சாதகமாக இருந்திருக்கும்.
ஆனால் இருவரும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் தான் லக்னோ அணியால் 170 ரன்களை எட்ட முடிந்தது. இருவருக்கும் என வாழ்த்துக்கள். முதல் போட்டியை விட இரண்டாவது போட்டியில் நாங்கள் ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட்டுள்ளோம், விளையாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.