மகளிர் ஐபிஎல் தொடரில் இது நடந்தால் நன்றாக இருக்கும் - ஸ்மிருதி மந்தனா!

Updated: Wed, Aug 18 2021 15:04 IST
Image Source: Google

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாக திகழ்ந்து வருபவர் ஸ்மிருதி மந்தனா. அதிரடியான பேட்டிங் திறமையால் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீராங்கனையாகவும் இவர் வலம் வருகிறார். 

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வினின் யூடியூப் தளத்திற்கு பேட்டியளித்த மந்தனா, மகளிர் ஐபிஎல் தொடர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி தனது கருத்தைக் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய மந்தனா,“இந்தியாவில் ஆடவர், மகளிருக்கு மாநிலங்களின் எண்ணிக்கை ஒரே அளவில் தான் உள்ளன. ஆடவர் ஐபிஎல் போட்டியைத் தொடங்கிய பிறகு அதன் தரம் நாளுக்கு நாள் அதிகமாகியுள்ளது. இப்போதுள்ள தரம் 10 வருடங்களுக்கு முன்பு இல்லை. இதேதான் மகளிர் ஐபிஎல் போட்டிக்கும் நடக்கும். மகளிர் ஐபிஎல் போட்டியை முதல் ஐந்து அல்லது ஆறு அணிகளுடன் தொடங்கலாம். ஓரிரு வருடங்களில் எட்டு அணிகளாக உயர்த்தலாம். 

ஐபிஎல் போட்டியை ஆரம்பிக்காமல் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. இந்திய மகளிர் கிரிக்கெட்டில் திறமையான வீராங்கனைகள் இல்லை என்று கூறுவதில் அர்த்தமில்லை. ஏனெனில் எங்களுக்கு ஐபிஎல் போன்ற ஒரு போட்டி கிடையாது. ஆறு அணிகள் கலந்துகொள்ளும் டி20 போட்டி இருந்ததே இல்லை. அதனால் நம்மிடம் திறமையான வீராங்கனைகள் இருக்கிறார்களா என்பது இனிமேல் தான் தெரியும். 

மகளிர் ஐபிஎல் போட்டியைத் தொடங்கும்போது எட்டு அணிகள் இருந்தால் அது எப்படி இருக்கும் என எனக்குத் தெரியவில்லை. எனவே முதலில் ஆறு அணிகள், பிறகு எட்டு அணிகள் என மாறலாம். ஐபிஎல் போட்டியைத் தொடங்காமல் நம் வீராங்கனைகளின் திறமையை நம்மால் உயர்த்த முடியாது. 

ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் கிரிக்கெட் நான்கு வருடத்துக்கு முன்பு இருந்தது போல இப்போது இல்லை. ஆஸ்திரேலியாவில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடக்கூடிய வீராங்கனைகள் 40-50 பேர் இருக்கிறார்கள். இது இந்தியாவிலும் நடக்கவேண்டும். அதற்கு ஐபிஎல் பெரிய அளவில் உதவும்” என்று தெரித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை