இந்த தோல்வியால் ஏற்பட்ட வலியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை - டெம்பா பவுமா!

Updated: Fri, Nov 17 2023 00:03 IST
இந்த தோல்வியால் ஏற்பட்ட வலியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை - டெம்பா பவுமா! (Image Source: Google)

ஆஸ்திரேலியா அணி இன்று உலகக்கோப்பை அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியை வென்று  இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வது என தவறான முடிவை எடுத்தது. ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் இருவரும் ஜோடி சேர்ந்து தொடர்ச்சியாக 14 ஓவர்கள் வீசி, தென் ஆப்பிரிக்காவின் முதல் நான்கு விக்கெட்டுகளை 24 ரன்களுக்கு பறித்தார்கள்.

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 48 வது ஓவரில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தற்பொழுது ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டியில் தொடரை நடத்தும் இந்திய அணிக்கு எதிராக குஜராத் அஹ்மதாபாத் மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி விளையாட இருக்கிறது.

இந்நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா, “ இந்த தோல்வியால் ஏற்பட்ட வலியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை முதலில் ஆஸ்திரேலிய அணிக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பைனலில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கட்டும். இன்றைய ஆட்டத்தில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இந்த போட்டியில் எங்களுடைய திறமையை மற்றும் போராட்ட குணம் ஆகியவற்றை நாங்கள் வெளிப்படுத்தினோம். 

தோல்வியை நாங்கள் சீக்கிரமாக ஒப்புக்கொள்ளவில்லை. பேட்டிங்களும் பந்து வீச்சிலும் நாங்கள் தொடக்கத்தில் சரியாக விளையாடவில்லை. அந்த இடத்தில் தான் நாங்கள் தோல்வியை கண்டோம். ஆஸ்திரேலிய அணி எங்களை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கினார்கள். 24 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தால் நிச்சயமாக நல்ல இலக்கை நிர்ணயிக்க கடுமையாக போராட வேண்டும். எனினும் மில்லர் மற்றும் கிலாசன் சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் கிளாசன் தொடர்ந்து களத்தில் நிற்க முடியவில்லை. 

வழக்கம் போல் டேவிட் மில்லர் பிரமாதமாக விளையாடினார். அவருடைய இன்னிங்ஸ்தான் எங்கள் அணியின் குணத்திற்கான ஹைலைட் என்று நான் கூறுவேன். இது போன்ற நெருக்கடியில் இப்படி விளையாடுவது சாதாரண விஷயம் கிடையாது. ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 70 ரன் மேல் அடித்து விட்டார்கள். அதன் மூலம் அந்த அணியின் வெற்றி வாய்ப்பு எளிதாகி விட்டது. எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் மார்க்ரம் மற்றும் மகாராஜா ஆகியோர் ஆஸிக்கு நெருக்கடி கொடுத்தார்கள். எங்களுக்கு சில கடின வாய்ப்புகள் வந்தது. அதை நாங்கள் கோட்டை விட்டோம்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் இல்லை. ஆனால் கோட்ஸி ஒரு போர் வீரர் போல் செயல்பட்டார். அவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டது. இருப்பினும் அவர் பவுலிங் வீசுகிறேன் என்று கூறினார். குயின்டன் டி காக் தன்னுடைய கெரியரை நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்று யோசித்து இருப்பார். இருப்பினும் இந்த போட்டியை அவர் மறக்க மாட்டார். தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் குயின் டன் டி காக் ஒரு சிறந்த ஜாம்பவானாக அறியப்படுவார்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை