ரியான் பராக்கிடம் உள்ள திறனை புரிந்து கொள்ளாத சிலர் அவரை விமர்சிக்கின்றனர் - ரவிச்சந்திரன் அஸ்வின்!

Updated: Thu, Jan 11 2024 12:31 IST
ரியான் பராக்கிடம் உள்ள திறனை புரிந்து கொள்ளாத சிலர் அவரை விமர்சிக்கின்றனர் - ரவிச்சந்திரன் அஸ்வின்! (Image Source: Google)

இந்திய அணியின் அனுபவ வீரரும், தமிழக சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் அண்மையில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி இருந்தார். இதனைத் தொடர்ந்து நாடு திரும்பியுள்ள அஸ்வின் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தற்போது பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்து வரும் அஸ்வின் அவ்வப்போது நடைபெறும் கிரிக்கெட் தொடர்பான முக்கிய நிகழ்வுகள் குறித்து தனது சமூக வலைதளத்தில் மூலம் ரசிகர்களிடம் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ரஞ்சி தொடரில் விளையாடி வரும் வீரர்கள் குறித்தும் அவர் பேசி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இந்தியாவில் ரஞ்சி கோப்பை தொடர் தொடர் நடைபெற்று வரும் வேளையில் ஒவ்வொரு மாநில அணியிலும் சிறப்பாக விளையாடும் வீரர்களை சரியாக குறிப்பிட்டு அஸ்வின் பல்வேறு செய்திகளை ரசிகர்களுக்காக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அசாம் மாநில அணிக்காக விளையாடி வரும் ரியான் பராக்கின் ஆட்டத்தை அஸ்வின் பாராட்டியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

இதுகுறித்து  பேசிய அவர், “ஐபிஎல் தொடரின் போது ரியான் பராக்கின் ஆட்டத்தை பார்த்துவிட்டு அவருக்கு தகுதிக்கு மீறி நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது என ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். ஆனால் அவர் 22 வயதே ஆன ஒரு இளம் வீரர். உள்ளூர் தொடர்களில் அவரது ஆட்டம் கடந்த சில சீசன்களாகவே மிகச் சிறப்பாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக சையத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே தொடர் என இரண்டு தொடர்களிலும் அசத்திய அவர் தற்போது ரஞ்சி தொடரிலும் அட்டகாசமாக விளையாடி வருகிறார்.

சத்தீஸ்கர் அணிக்கு எதிரான இந்த ரஞ்சி போட்டியில் 155 ரன்கள் அடித்திருக்கிறார். அதிலும் 87 பந்துகளில் அவர் 155 ரன்களை அடித்து இருக்கிறார். இதன்மூலம் அவர் தன்னை டி20 பேட்ஸ்மேன் என்பதை காட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. போட்டியின் சூழ்நிலை அவரை அவ்வாறு அதிரடியாக விளையாட செய்துவிட்டது.

ஏனெனில் ஒருபுறம் கொத்து கொத்தாக விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருக்க மறுபுறம் இப்படி அதிரடியான ஆட்டத்தை தான் வெளிப்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலையை புரிந்து கொண்டு அவர் விளையாடினார். ஏற்கனவே உள்ளூர் போட்டிகளில் அசாம் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் அந்த அணியின் நட்சத்திர வீரராக இருந்து வருகிறார். அவரிடம் உள்ள திறனை புரிந்து கொள்ளாத சிலர் அவரை விமர்சித்தாலும் அவரது எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும்” என கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை