இதுபோல் பயமற்ற கிரிக்கெட்டையே விளையாட விரும்புகிறொம் - சூர்யகுமார் யாதவ்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நேற்று டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் அபாரமான சதத்தின் மூலம், திலக் வர்மாவின் பொறுப்பான ஆட்டத்தின் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களைச் சேர்த்தது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 7 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் என 107 ரன்களையும், திலக் வர்மா 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 25 ரன்களையும், ஜெரால்ட் கோட்ஸி 23 ரன்களையும், ரியான் ரிக்கெல்டன் 21 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி 17.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த போட்டியில் சதமடித்து அசத்திய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலியில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், “கடந்த 3-4 தொடரில் நாங்கள் எங்களது பிராண்டை மாற்றாமல் விளையாடியதுடன், அதில் வெற்றியையும் பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். சஞ்சு சாம்சன் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக உழைத்ததற்கான பலனை இன்று அனுபவித்து வருகிறார். அவர் 90 ரன்களில் இருந்த சமயத்தில் தனது சாதனைக்காக பார்க்காமல் பவுண்டரி அடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார்.
அவர் அனது சொந்த சாதனைகளை பொருட்படுத்தாமல் அணிக்காக விளையாடினார், இதைதான் நாங்கள் அனைவரிடமும் எதிர்பார்க்கிறோம். மேலும் இப்போட்டியின் முக்கியமான தருணங்களில் நான் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். அந்த சமயத்தில் நாங்கள் கிளேசன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரது விக்கெட்டுகளை தேடிக்கொண்டிருந்தோம். ஆனால் சுழற்பந்துவீச்சாளர்கள் அவர்களை கட்டுப்படுத்திய விதம் நம்பமுடியாததாக இருந்தது.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் எங்கள் அணியில் உள்ள அனைவரும் எனது வேலையை எளிதாக்கியுள்ளனர். அதனால் நான் எதனையும் தனியாக செய்யவேண்டிய அவசியமில்லை. இந்த அச்சமற்ற அணுகுமுறையை அவர்கள் காட்டிய விதம் மற்றும் மைதானத்திற்கு வெளியேயும் உள்ளேயும் மிகிழ்ச்சியை கொடுக்கிறது. மேலும் நாங்கள் இதுபோல் பயமற்ற கிரிக்கெட்டையே விளையாட விரும்புகிறொம்” என்று தெரிவித்துள்ளார்.