இந்த உலகக் கோப்பையில் நாங்கள் அனைத்து போட்டிகளிலும் வெல்வோம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!

Updated: Wed, Aug 28 2024 11:19 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக வங்கதேசத்தில் நடைபெற இருந்த இத்தொடரானது, அங்கு நடைபெற்ற உள்நாட்டு கலவரம் காரணமாக தற்சமயம் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. 

அதன்படி குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய மகளிர் அணியானது அக்டோபர் 04ஆம் தேதி துபாயில் நடைபெறும் லீக் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அதனைத்தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்திய - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டியானது அக்டோபர் 06ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹர்மன்பிரீத் கவுர் அணியின் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணைக்கேப்டனாகவும் இத்தொடரில் செயல்படுவார்கள் என பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்த இந்திய அணியில் ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ரேனுகா சிங் தாக்கூர், தயாளர் ஹேமலதா, சஜனா சஜீவன் என நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “உலகக் கோப்பைத் தொடர்களில் முக்கியமான நேரத்தில் எப்போதும் சிறப்பாக செயல்பட வேண்டும். கடந்த காலங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இந்த முறை டி20 உலகக் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அணி அதிக அளவிலான போட்டிகளில் விளையாடியது கிடையாது. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆடுகளங்களின் தன்மை இந்திய ஆடுகளங்களைப் போன்றே இருக்கப் போகிறது என நினைக்கிறேன். எனவே இங்குள்ள ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப விரைவில் எங்களை மாற்றிக் கொள்வோம். ஒரு அணியாக, நாங்கள் எங்கள் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறோம்.

இந்த முறை உலகக் கோப்பையில் இன்னும் சாதகமான முறையில் நம்மை வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். பந்துவீச்சாளர்கள் ஒரு அணியாக மிகவும் கடினமாக உழைக்கிறார்கள், இந்த உலகக் கோப்பையில் நாங்கள் அனைத்து போட்டிகளையும் வெல்வோம் என்று நம்புகிறேன். மேலும் நம்பை நிகழ்காலத்தில் வைத்துக்கொண்டு நல்ல கிரிக்கெட்டை விளையாடுவது எப்போதும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார். 

இந்திய மகளிர் அணி: ஹர்மன்ப்ரீத் கௌர்(கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஷ்திகா பாடியா, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேனுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா ஷோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பட்டீல் *, சஜனா சஜீவன்.

Also Read: Funding To Save Test Cricket

ரிஸர்வ் வீரர்கள்: உமா சேத்ரி (விக்கெட் கீப்பர்), தனுஜா கன்வர், சைமா தாகூர்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை