வெற்றிக்காக எங்களால் இயன்றவரை முயற்சித்தோம் - டெம்பா பவுமா!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 07ஆம் தேதி டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 357 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டாக, அதன்பின் முதல் இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் 154 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியானது 173 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து, விண்டீஸ் அணிக்கு 298 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இலக்கை எட்டாவிட்டாலும், ஐந்தாம் நாள் முடிவுவரை விக்கெட்டை பாதுகாத்ததுடன், 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்தது. இதன்மூலம் இப்போட்டியானது முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. மேற்கொண்டு இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேசவ் மஹாராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா, “நாங்கள் இப்போட்டியில் வெல்வதற்காக எங்கள் பக்கத்திலிருந்து எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம். இறுதியில் போதுமான நேரம் இல்லை என்பதாலும், நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை என்பதாலும் இப்போட்டியை வெல்லமுடியாமல் போனது. இருப்பினும் இது எங்களுக்கு ஒரு நல்ல கிரிக்கெட் போட்டியாக இருந்துள்ளது.
மேற்கொண்டு எங்கள் அணியின் அனுபவமின்மையைக் குறைக்க கூடுதல் பேட்டர்களுடன் இப்போட்டியை எதிர்கொண்டோம். ஏனெனில் நாங்கள் அதிக பேட்டர்களைக் கொண்டு ரன்களை குவிக்க விரும்பினோம். அதன்படி, இப்போட்டியில் விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி எங்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார். ஆனால் இங்கு மோசமான வானிலை காரணமாக இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெறும் நேரத்தை இழந்துவிட்டோம்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
மேற்கொண்டு விக்கெட் இன்னும் கொஞ்சம் மோசமடைவதை நாங்கள் விரும்பினோம், ஆனால் அது நடக்கவில்லை. எங்களிடம் உள்ள வீரர்களைக் கொண்டு எங்களால் இயன்றவரை முயற்சித்தோம். இந்த விக்கெட்டில், கேசவ் மற்றும் ரபாடா விக்கெட்டுகளைப் பெற மிகவும் பொருத்தமானவர்கள் என்று உணர்ந்தேன். மீதமுள்ள பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்ததுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.