SA vs WI, 2nd ODI: பவுமா சதம் வீண்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது விண்டீஸ்!

Updated: Sun, Mar 19 2023 12:08 IST
West Indies Beat South Africa By 48 Runs In 2nd ODI (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஈஸ்ட் லண்டனில் நேற்று  தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பிராண்டன் கிங் - கைல் மேயர்ஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தள் அமைத்துக்கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிராண்டன் கிங் 30 ரன்களிலும், கைல் மேயர்ஸ் 36 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷமாரா ப்ரூக்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப் - நிக்கோலஸ் பூரன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் பூரன் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய ரோவ்மன் பாவெல் 46 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபக்கம் நங்கூரம் போல் நின்ற ஷாய் ஹோப் சதமடித்து அசத்தினார். அதன்பின் அதிரடி காட்டத்தொடங்கிய அவர் இறுதிவரை களத்தில் இருந்ததுடன் 5 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 128 ரன்களை குவித்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 335 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் - கேப்டன் டெம்பா பவுமா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 76 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் அரைசதம் ஆடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டி காக் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார் . 

அதன்பின் களமிறங்கிய ரியான் ரெக்கெல்டன் 14, ஸொர்ஸி 27, ரஸ்ஸி வெண்டர் டுசென் 8, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 6, மார்கோ ஜான்சென் 17 ரன்களில் என அடுத்தடுத்டு விக்கெட்டுகளை இழக்க, மறுமுனையில் நங்கூரம் போல் நின்று அதிரடி காட்டிய டெம்பா பவுமா தனது 4ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பினும் அதிரடியாக விளையாடிய பவுமா 11 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 145 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் தென் ஆப்பிரிக்க 287 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப், அகீல் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணிய வீழ்த்தி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி சதமடித்த ஷாய் ஹோப் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை