யாருமே 100 சதவீத உழைப்பை போடவில்லை - ஷாய் ஹோப் காட்டம்!
ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை அண்மையில் வெளியானது. வரும் அக்டோபா் 5ஆம் தேதி முதல் நவம்பா் 19ஆஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் 8 அணிகள் உலக சூப்பா் லீக் மூலம் தோ்ச்சி பெற்றன. தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் தகுதிச்சுற்று போட்டிகளின் அடிப்படையில் இரண்டு அணிகள் தகுதி பெறும்.
இந்த நிலையில், ஸ்காட்லாந்துக்கு எதிராக இன்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கான வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் இழந்துள்ளது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 43.5 ஓவர்களில் 181 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்காட்லாந்து 43.3 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது.
ஏற்கனவே ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்திடம் தோல்வியடைந்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இன்றையப் போட்டியில் ஸ்காட்லாந்திடம் தோற்றதன் மூலம் 48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்துள்ளது.
இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப், ''இன்றைய போட்டி நடைபெற்ற மைதானத்தில், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்யும் அணிதான் வெற்றிபெறும் என்ற நிலை இருந்தது. தொடக்கத்தில் அந்த அளவுக்கு பிட்ச் வேகத்திற்கு சாதகமாக இருந்தது. பீல்டிங் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. கேட்ச்களை தொடர்ந்து தவறவிட்டோம். யாருமே 100 சதவீத உழைப்பை போடவில்லை. இந்த போட்டியில் மட்டுமல்ல, அனைத்து போட்டிகளிலும்தான்'.
இன்னமும் இரண்டு போட்டிகள் இருக்கிறது. அதில், வலிமையுடன் கம்பேக் கொடுப்போம் என நம்புகிறேன். இப்போட்டியில் ஸ்காட்லாந்து அணி அபாரமாக செயல்பட்டது. அனைத்து வீரர்களும் கடின உழைப்பை போட்டார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்தார்.