வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட ஆசைப்பட்டால் அதற்குத் தயாராக இருக்கவேண்டும் - பில் சிம்மன்ஸ்!
சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களில் பிரபல வீரர் ரஸ்ஸல் இடம்பெறவில்லை. 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு அவர் இந்தப் பக்கமே திரும்பவில்லை. தற்போது இங்கிலாந்தில் தி ஹன்ட்ரெட் போட்டியில் விளையாடி வருகிறார். நரைன் எப்போது விளையாடுவார் என யாருக்கும் தெரியவில்லை.
உடற்தகுதித் தேர்வுகளுக்கு எவின் லூயிஸ், ஒஷானே தாமஸ் வரவில்லை. ஷெல்டன் காட்ரெல், ராஸ்டன் சேஸுக்குக் காயம். தனிப்பட்ட காரணங்களுக்காக ஃபேபியன் ஆலன் விளையாடவில்லை. டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் சரியான வீரர்களைக் களமிறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இந்நிலையில் இதுபற்றி வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறுகையில், “இது வேதனையாக உள்ளது. எங்களால் வேறு என்ன செய்ய முடியும்? உங்கள் நாட்டுக்காக விளையாடுங்கள் என அவர்களிடம் நான் சென்று கெஞ்ச முடியாது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட ஆசைப்பட்டால் அதற்குத் தயாராக இருக்கவேண்டும். காலம் மாறிவிட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விளையாடுவதை விடவும் வேறு அணிகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் அளித்தால் நிலைமையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.