வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சிம்மன்ஸ் விலகல்?
டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த உலகக் கோப்பையில் நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் சுற்றோடு வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஃபில் சிம்மன்ஸ் தனது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட தொடருடன் அவர் விலகவுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த 2012 மற்றும் 2016 என இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்ற சாம்பியன் அணி, சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறாதது அந்த நாட்டு ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. 2007-இல் டி20 உலகக் கோப்பை அறிமுகமானதிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி குரூப் நிலையின் அடுத்த நிலைக்கு தகுதி இருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.