வங்கதேச டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி டி20 தொடரில் நடந்து முடிந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் 4ஆவது டி20 போட்டியானது நாளை (நவ.17)செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே டி20 தொடரை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும். இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியானது அடுத்ததாக வங்கதேச அணியுடன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதியும், ஒருநாள் தொடரானது டிசம்பர் 8ஆம் தேதி முதலும் டி20 தொடரானது டிசம்பர் 15ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ தொடரும் நிலையில், அணியின் துணைக்கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் லிட்டன் தாஸ், மொமினுல் ஹக், மெஹிதி ஹசன், தஸ்கின் அஹ்மத், உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அனைவரும் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர்.
இந்நிலையில் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெக் பிரேத்வைட் தலைமையிலான இந்த அணியில் அனுபவ ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் ஜஸ்டின் கிரீவ்ஸ், கெவின் சின்க்ளேர் உள்ளிட்டோர் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர். இதுதவிர்த்து மற்ற நட்சத்திர வீரர்கள் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி: கிரெய்க் பிராத்வைட் (கே), ஜோசுவா டா சில்வா, அலிக் அதானாஸ், கேசி கார்டி, ஜஸ்டின் க்ரீவ்ஸ், கவேம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், அல்ஸாரி ஜோசப், ஷமர் ஜோசப், மைக்கைல் லூயிஸ், ஆண்டர்சன் பிலிப், கீமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ், கெவின் சின்க்ளேர், ஜோமெல் வாரிக்கன்
Also Read: Funding To Save Test Cricket
வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஷத்மான் இஸ்லாம், மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக் ஷோராப், மஹிதுல் இஸ்லாம் அன்கான், லிட்டன் தாஸ், ஜாக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ் (துணைக்கேப்டன்), தைஜுல் இஸ்லாம், ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், நஹித் ராணா, ஹசன் முராத்.