ஓய்வை அறிவித்தார் லெண்டல் சிம்மன்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணியில் 2006ஆம் ஆண்டு அறிமுகமான லெண்டல் சிம்மன்ஸ் 2021ஆம் ஆண்டு வரை அந்த அணிக்காக பல அதிரடியான ஆட்டங்களை விளையாடியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 68 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள லெண்டல் சிம்மன்ஸ், 8 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார்.
இதில் 68 ஒருநாள் போட்டிகளில் 1,958 ரன்களையும், 66 டி20 போட்டிகளில் ஆடி 1,527 ரன்களையும் குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 2015ஆம் ஆண்டுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சிம்மன்ஸ் விளையாடவில்லை. டி20 கிரிக்கெட்டில் கடைசியாக கடந்த ஆண்டு ஆடினார். அதன்பின்னர் ஆடவில்லை.
மேலும் 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலக கோப்பையை வென்றபோது வெஸ்ட் இண்டீஸ் அணியில் முக்கிய அங்கம் வகித்தவர் சிம்மன்ஸ்.
2016 டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்தியாவிற்கு எதிராக அவர் அடித்த 82 ரன்கள் தான், அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி, பின்னர் இறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் கோப்பையை வென்றது. அந்தவகையில், அந்த கோப்பையை வெல்ல முக்கிய காரணங்களில் சிம்மன்ஸும் ஒருவர்.
ஐபிஎல் உட்பட உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் போட்டிகளில் ஆடியிருக்கிறார். ஐபிஎல்லில் 2014லிருந்து 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடினார் சிம்மன்ஸ். தற்போது 37 வயதான லெண்டல் சிம்மன்ஸுக்கு இனிமேல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் கிடைக்காது. எனவே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார் லெண்டல் சிம்மன்ஸ்.
முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் ராம்டினும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.