இலங்கையை ஒயிட் வாஷ் செய்து தொடரைக் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்!
இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு குணத்திலக, கருணரத்னே இணை தொடக்கம் தந்தது.
இதில் குணத்திலக 36 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 31 ரன்களில் கருணரத்னேவும் விக்கெட்டை இழந்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஆறாவது அஷென் பந்தாரா, ஹசரங்கா இணை நிதானமாக விளையாடி அரைசதம், அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களை எடுத்தது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹசரங்கா 80 ரன்களையும், அஷென் பந்தாரா 55 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் எவின் லீவிஸ் 13 ரன்களிலும், ஜேசன் முகமது 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தானர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷாய் ஹோப் - டேரன் பிராவோ இணை நிலைத்து விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.
இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினார். பின்னர் 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷாய் ஹோப் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேரன் பிராவோ சர்வதேச ஒருநாள் போட்டியில் மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்தார்.
அதன்பின் 102 ரன்களில் டேரன் பிராவோவும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததோடு, அணியையும் வெற்றிப் பெறச்செய்தார். இதன் மூலம் 48.3 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடி சதமடித்த டேரன் பிராவோ ஆட்டநாயகனாகவும், தொடர் முழுதும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் தொடர் நாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.