‘இந்திய அணியை உலகின் நம்பர் ஒன்னாக மாற்றுவேன்’ - கோலி கூறியது குறித்து நினைவு கூறும் ஆலன் டொனால்ட்!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு போட்டிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் இத்தொடர் பரபரப்பின் உச்சத்திற்கே ரசிகர்களைக் கொண்டு சென்றுள்ளது.
ஏனெனில் முதல் போட்டி மழையால் டிராவில் முடிந்தாலும், லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்களில் வெற்றிபெற்று, இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே துவம்சம் செய்தது.
இந்நிலையில் இந்திய அணி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆலன் டொனால்ட், 2015ஆம் ஆண்டே உலகின் நம்பர் ஒன் அணியாக இந்திய அணியை மாற்றுவதே தன்னுடைய குறிக்கோள் என விராட் கோலி கூறியதாக நினைவு கூர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆலன் டொனால்ட் "எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு என்னிடம் பேசிய கோலி. இந்திய அணியை நம்பர் 1 டெஸ்ட் அணியாக உருவாக்க வேண்டும் என்பதே தன் லட்சியம் என கூறினார். அதை இப்போது அவர் செய்து காட்டியிருக்கிறார். அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் எதை நோக்கி செல்கிறார் என்பது கோலிக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.
இந்திய அணி முழுவதும் உடற்தகுதியுடன் இருக்கும் சிறந்த வீரர்களை உருவாக்க வேண்டும். உலகிலேயே சிறந்த அணியாக இருக்க வேண்டும். எந்தவொரு அணியையும் சொந்த நாட்டிலும் சரி வேறு வெளிநாடுகளிலும் தோற்க அடிக்க கூடிய திறன் இருக்க வேண்டும். பவுலிங்கில் மிகச் சிறந்த அணியாக இருக்க வேண்டும் என்று கோலி அப்போதே விரும்பினார். அதனை தற்போது செய்து காட்டியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.